தமிழீழக் காவல் துறையில் ஒரு முதன்மை ஆய்வாளராகவும் முல்லைத்தீவு மாவட்ட கண்காணிப்பாளராகவும் பணியாற்றி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம்வரை தமிழீழ மக்களோடு மக்களாக நின்று தமிழீழக் காவல்துறையின் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றி இனவழிப்பின் சாட்சியமாகவும் இருந்துவந்த திரு. இம்மானுவல் நிக்சன் ரஞ்சித்குமார் (வயது 51) அவர்கள் பிரான்சில் கடந்த (27. 03. 2022) ஞாயிற்றுக்கிழமை சாவடைந்தமை அறிந்ததே.
அமரர் ரஞ்சித்குமார் அவர்களின் 31 ஆம் நாள் நினைவு நாளான 26.04.2022 நேற்று அவரது குடும்பத்தினர் நினைவுப் பகிர்வு ஒன்றை விடுத்துள்ளனர்.
31 ம் நாள் நினைவுகளுடன்…
கண்ணீரைத்தவிர என்னிடம் எதுவும் இல்லை அப்பா..உங்களைப் பற்றிய நினைவுகள் மட்டுமே மிச்சமாக…
2009 இன் பின் உங்களை ,எதிரியிடமிருந்தும் , நோயிலிருந்தும் காப்பதற்காய் எவ்வளவு போராடினேன்.. நீங்கள் தடுப்புமுகாம்களிலும், பின்னர் புலம்பெயர்தேசத்திலும் பிரிந்திருந்த காலப்பகுதிகளில், உங்களின் குரல்வழியான வழிநடத்தல்களுடன் எந்த நெருப்பாற்றையும் துணிந்துதானே கடந்தோம்.. ஏனப்பா எங்களை அந்தரிக்க விட்டீங்கள்? “பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். இனி பயமில்லை. எல்லாமே தொடருவார்கள்.” என்று மருத்துவமனையில் விடைபெறும் இரண்டு நாட்களின் முன் நீங்கள் சொன்னபோது பூடகமான உங்களின் பேச்சை நான் உணரவில்லையப்பா. அந்தளவிற்கு,நீங்கள் திரும்பி வருவிங்களென்று நான் நம்பினேன். நான் கண்ணீர் சிந்தினால் நீங்கள் உடைஞ்சு போயிடுவிங்களென்று அவசர சிகிச்சைப்பிரிவை விட்டு வெளியே வரும்வரை என்ர மனசை கல்லாக்கி, தலைதடவி, செபித்துநின்று, இயல்பாய் கதைப்பது போல் நடித்து, எனக்குள்ளே நான் தனித்து உடைஞ்சுபோனது உங்களுக்கு தெரியாதப்பா. எங்கள் குடும்பத்துக்காக இல்லாமல் தேசத்திற்காயெண்டாலும் நீங்கள் திரும்பி வந்திருக்க வேணும்.நீங்கள் நேசித்த உங்கட பெடியளும், பிள்ளையளும், உறவுகளும், உங்களை தேடுகினம். என்னையோ,பெத்த பிள்ளைகளையோ ஒருமையில் நீ என்றுகூட சொல்லாத உங்கட பண்பை இப்போது உங்களை நேசித்த உறவுகள் மூலம் அறியும்போது இன்னும் நெகிழ்ந்து போகிறேன். ஒரு தேசத்தின் மதிப்பிற்குரிய காவலன், என் காவலனாகவும்,மூன்று மகள்களின் காவலனாகவும் இருந்தது நாங்கள் பெற்ற வரமே! இனியும் எங்களுக்கு நீங்கள் காவலாக இருப்பிங்களென்பது எனக்கு நன்கு தெரியும்.. நீங்கள் எங்களுடன் வாழமுடியாத காலங்களை, மீண்டும் எம் பிள்ளைகளிடம் மகனாகப் பிறந்து வாழ வந்து விடுங்கோ அப்பா. உங்களின் வருகைக்காக,என்றும்போல நாங்கள் காத்திருப்போம்.