தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின்34 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு பாரிஸ் நகரின் புறநகர் பகுதியான நந்தியார் பிரதேசத்தில் கடந்த 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை பி. பகல் 3. 00 மணிக்கு பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பால், மாவீரர் பணிமனையுடன் இணைந்து நடாத்தப்பட்டது.
பொதுச்சுடரினை நந்தியார் பிரதேச பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. சாந்திக்குமார் அவர்கள் ஏற்றி வைக்க மாவீரர் பொதுப்படத்திற்கான சுடரினை கப்டன் சூரியத்தேவனின் சகோதரரும், தமிழீழத்தாயவள் அன்னை பூபதியம்மாவின் திருவுருவப்படத்திற்கு 2 ஆம் லெப். ஆதவனின் சகோதரரும், நாட்டுப்பற்றாளர்கள் திருவுருவப்படத்திற்கு நாட்டுப்பற்றாளர் சிவராசா அவர்களின் புதல்வியும், நாட்டுப்பற்றாளர் வேல்மாறனின் சகோதரரும், 2 ஆம் லெப். காண்டீபனின் சகோதரியும், வீரவேங்கை பவித்திராவின் சகோதரியும் ஏற்றி வைத்து மலர்வணக்கம் செலுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மக்களின் சுடர், மலர் வணக்கம் இடம்பெற்றது
அதனைத் தொடர்ந்து கலைபண்பாட்டுக்கழக கலைஞர்கள், பாடகர்கள், குழந்தைகள் விடுதலைப்பாடல்களையும், எழுச்சிப்பாடல்களையும் கரோக்கி இசைமூலம் வழங்கினர். மாவீரர் பாடல்களுக்கான நடனத்தை புளோமினல், ஆர்ஜெந்தே தமிழ்ச்சோலை மாணவிகள் வழங்கினர். அன்னை பூதியின் நினைவை சுமந்த கவிதைகளை பெண்கள் அமைப்பு உறுப்பினர் திருமதி. எட்வேட் யசோ அவர்களும், இளையோரான செல்வி. ஐக்சன் ஜெனிபர் ஆகியோர் வழங்கினர்.
சிறப்புரையை தமிழ்ச்சோலை தலைமைப்பணியக கல்விச் செயற்பாட்டாளர் திரு. அகிலன் வழங்கியிருந்தார். அவர் தனது உரையில் தாயவள் அன்னை பூபதியம்மாவின் தியாகம் பற்றியும் தன்சொந்தப்பிள்ளைகளை விட, தன் இனத்தின் பிள்ளைகளுக்கு சுதந்திரம் நிம்மதி விடுதலை வேண்டும் என்பதையும் தமிழீழ மக்களுக்கு அது தரவேண்டும் என்று அகிம்சையை உலகிற்கு போதித்த பாரததேசத்திற்கு எதிராகவும், மகாத்மாகாந்தி காட்டிய வழியிலேயே இருக்க போகின்றேன் என்று அதனைச்செய்து காட்டி தன் உயிரை தந்தவர் பூபதியம்மா என்றும், அன்று இதனை ஒரு பாராமுகமாக இருந்த காந்தியின் வழியை பின்பற்றிய அகிம்சை தேசம் இந்தியா இது போல துரோகங்களை தமிழீழ மக்களுக்கு செய்துள்ளதையும் நாம் என்றும் மறக்க முடியாது என்றும் இன்று இளையவர்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுகின்றது. அகிம்சையை உலகிற்கு போதித்த காந்தியா? அல்லது சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து தனது பிள்ளைகளை குடும்பத்தை துறந்து நாட்டுக்காக தன்னுயிர்தந்த தமிழீழத் தாயவள் அன்னைபூபதியம்மாவா அகிம்சையில் உயர்ந்தவர் என்று சிந்திக்கின்ற நிலையில், ஈழத்தமிழ் இனத்திற்கு அழிவு தந்த சிங்கள் தேசம் அந்த அழிவுக்கு உட்பட்டு அகிலமே தூற்றுகின்ற நிலையில் நின்று கொண்டிருப்பதையும் வெகுவிரைவில் ஈழம் என்ற எமது இலட்சிய தேசம் எம்கையில் கிடைக்கும் என்றும் அதற்கான புறச்சூழல்கள் அமைவதாகவும், அதற்காக நியாயத்தின் பக்கம் நின்று எமது மக்கள் தொடர்ந்தும் எல்லாவழிகளிலும் அரசியல் சனநாயக ரீதியில் போராட வேண்டும் என்றும் கூறினார்.
பிரான்சில் அதிபர் தேர்தல் முடிந்து நடைபெறும் மே 1 ஆம் நாள் தொழிலாளர் நாள் பேரணி முக்கியம் வாய்ந்ததாக அமையும் என்றும், அதேபோல் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் பேரணியும் முக்கியம் வாய்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. நம்புங்கள் தமிழீழம் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
ஊடகப்பிரிவு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு