மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு இல்லத்தை நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றதால் நேற்று அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதனிடையே, கம்பஹா – மினுவாங்கொடையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்னவின் இல்லத்தையும் முற்றுகையிட்டு நேற்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு முழுவதும் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்றன.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பேரணியை ஆரம்பித்து காலிமுகத்திடலை சென்றடைய இருந்தனர்.
இந்நிலையில், போராட்டம் நடைபெறும் காலிமுகத் திடலுக்குள் பேரணியாக செல்ல முடியாதவாறு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள விஜயராமை மாவத்தையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடினர்.
இவ்வாறு கூடியவர்கள் மகிந்தாவின் இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அங்கு நூற்றுக்கணக்கான பொலிஸாரும் அதிரடிப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுட்டிருந்தனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு நின்று ஜனாதிபதிக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். அவர்களை வீட்டுக்கு போக வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனிடையே, ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரின் இல்லத்துக்குள்ளும் நுழைய அவர்கள் முயன்றனர். அவர்களை பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் தடுத்து நிறுத்தினர். இதனால், அந்தப் பகுதியில் பெரும் பதற்றநிலை உருவானது.
இதேபோன்று, அரசாங்கத்துக்கு எதிராக அரசாங்கத்துக்கு எதிராகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதி கோரியும் மினுவாங்கொடை – உடுகம்பொலை புனித பிரான்சிஸ் தேவாலயத்திலிருந்து நேற்று ஊர்லம் ஒன்று ஆரம்பமானது.
இந்த ஆர்ப்பாட்டம் மினுவாங்கொடையை வந்ததையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டுக்கு முன்பாகக் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியிலும் பதற்ற நிலை ஏற்பட்டது.