உயிர் வாழ்வதற்காய்
உணவு கேட்டு நீங்கள்
வீதிக்கு இறங்கி
கலகம் இயற்றியதால்
நேற்று துப்பாக்கிச் சன்னம்
உங்களவர் உயிர் பறிக்க
வெற்று ரவைகள் பொறுக்கி நீதி கேட்கின்றீர்… யார் படையினருக்கு சுடுவதற்கு கட்டளை இட்டது? என்று. உங்களுக்கு உடன் விசாரணைக்காய் இன்று உத்தரவு பறக்கிறது.
நீதி உங்களுக்கு இன்றே செய்கிறது.
உயிருக்கும் மேலாய்
உன்னத விடுதலைக்காய்
உரிமை கேட்டு நாங்கள்
உரத்துக் குரலெழுப்பியபோது
கொத்துக் குண்டுகள் பொஸ்பரஸ் குண்டுகள் பல்குழல் பீரங்கிகள் என விதம் விதமாய் சன்னங்கள் கொண்டு உங்கள் படையினர் எம் தாய் நிலத்தில் பல்லாயிரக்கணக்கில் எம்மவரை பந்தாடிச் சின்னாபின்னமாய்
சிதைத்து இனவழிப்பு செய்யப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் பன்னிரண்டு ஆண்டுகளாய் விசாரணையின்றி நீதி கேட்டு நடு வீதியிலே நிற்கின்றோம்.
நீதி தாமதிக்கப்பட்டமையால்
அது எமக்கு மறுக்கப்பட்ட நீதி.
எங்களைச் சுட்டவனும்
உங்களை சுட்டவனும்
உங்களவன் தான்.
நீதி அளிக்கப்பட்டவர்களாய் நீங்கள்.
நீதி மறுக்கப்பட்டவர்களாய் நாங்கள்.
நடராஜா காண்டீபன்,
கொள்கைப்பரப்பு செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி