தமிழ் மக்களைக் கொன்றொழித்து, சொத்துக்களை
நாசமாக்கி,இலட்சக்கணக்காண தமிழ் மக்களை அகதிகளாக்கிய ‘சூரியக்கதிர்-02’ எனும் குறியீட்டுப்பெயர் கொண்ட இராணுவ நடவடிக்கையை 19.04.1996 அன்று சிறீலங்கா அரசபடைகள் தொடக்கின.
ஏற்கெனவே ‘சூரியக்கதிர்-01’ என்ற பெயரில் வலிகாமத்தைக் கைப்பற்றியிருந்த அரசபடை, யாழ்ப்பாணத்தை முழுவதும் கைப்பற்றவென தன் இரண்டாவது நகர்வைத் தொடங்கிய நாள் இன்றாகும். ஆயிரக்கணக்கான மக்கள் வன்னிவர கிழாலிக்கடற்கரையிற் காத்திருந்தும் பயனில்லை. அவர்கள் மீதும் வான்படை தாக்குதல் நடத்தியது.”
இன்றைய நாளுக்கு இன்னொரு முக்கியத்துவமுண்டு. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ‘மூன்றாம் கட்ட ஈழப்போர்’ தொடங்கியதும் இன்றைய நாளில்தான்.
1995 இன் தொடக்கத்தில் சந்திரிக்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவந்த சிலசுற்றுக் கலந்துரையாடல்கள் (அவற்றைப் பேச்சுக்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் பேசியதைவிட தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கும் சந்திரிக்காவுக்குமிடையில் பரிமாறப்பட்ட கடிதங்களில் ஓரளவு விசயமிருந்தது) முறிவுக்கு வந்தன. அப்போது யாழ்ப்பாணம் மீது இருந்த பொருளாதார, மருந்துத் தடைகளை நீக்குதவதற்கு இழுத்தடித்து, கடைசியாக ஒரு கப்பலை அனுப்புவதாகச் சொன்னது சிறிலங்காஅரசு. வந்த கப்பலை பருத்தித்துறைக்கு அண்மையில் வைத்து அரசகடற்படை வழிமறித்துத் திருப்பி அனுப்பியது. மருந்துகளையும் அத்தியாவசியப் பொருட்களையும்கூட தரமுடியாத பேரினவாதச் சிந்தனையோடிருந்தது அரசு. யாழ்க்குடாநாட்டுக்கும் மற்ற நிலப்பரக்குமிடையில் போக்குவரத்து வசதிக்காக பாதைதிறக்கும் முயற்சிக்குக்கூட அரசு இணங்கிவரவில்லை.
இந்நிலையில் 19.04.1995 அன்று திருகோணமலைக் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த “ரணசுறு”, “சூரயா” என்ற போர்க்கப்பல்கள் மீது நீரடி நீச்சற்பிரிவுக் கரும்புலிகள் தாக்குதல் நடத்திக் கலங்களை மூழ்கடித்தனர்.
கதிரவன், தணிகைமாறன், மதுசா, சாந்தா என்ற நான்கு கடற்கரும்புலிகள் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தனர்.