ஆனந்தபுர நாயகர்களின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் இன்று 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00 மணியளவில் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் சேர்ஜி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சேர்ஜி பொன்துவாஸ் துணை நகரபிதா Moussa Diarra (Conseiller communautaire à la Communauté d’agglomération de Cergy-Pontoise) அவர்கள் ஏற்றிவைக்க
ஆனந்தபுர நாயகர்களுக்கான ஈகைச்சுடரினை ஆனந்தபுரம் பகுதியில் 25.03.2009 அன்று வீரச்சாவடைந்த மாவீரர் லெப்.கானக்கதிர் அவர்களின் தாயார், 22.07.1998 அன்று கிளிநொச்சியில் வீரச்சாவடைந்த மாவீரர் 2ஆம் லெப். கரிகாலன் அவர்களின் சகோதரன், 17.05.1985 அன்று வில்பத்துக்காட்டுப் பகுதியில் வீரச்சாவடைந்த மாவீரர் மாவீரர் லெப்.பிரசன்னா அவர்களின் சகோதரன், 01.02.1998 அன்று கிளிநொச்சியிப் பகுதியில் வீரச்சாவடைந்த மாவீரர் வீரவேங்கை வேணி அவர்களின் சகோதரி, 04.04.2009 அன்று ஆனந்தபுரம் பகுதியில் வீரச்சாவடைந்த மாவீரர் பிரிகேடியர் விதுசா அவர்களின் சகோதரி, 26.06.2008 அன்று செட்டிக்குளம் பகுதியில் வீரச்சாவடைந்த மாவீரர் மேஜர் ஜெயசீலன் அவர்களின் சகோதரன் ஆகியோர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. சேர்ஜி தமிழ்ச்சோலை மாணவ மாணவிகளின் எழுச்சி நடனம், ஆனந்தபுர நாயகர்கள் நினைவுசுமந்த கவிதை, பாடல், பேச்சு மற்றும் ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை மாணவிகளின் எழுச்சி நடனம், பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பாடகர்களின் எழுச்சி கானங்கள் என்பன உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தன.
சேர்ஜி பொன்துவாஸ் துணை நகரபிதா அவர்களும் தனது கருத்தக்களைப் பகிர்ந்திருந்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்டமையையிட்டுத் தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டதுடன் பிரான்சு தேசத்தில் இடம்பெறும் அதிபர்தேர்தலின் முக்கியத்துவம் குறித்தும் குறிப்பிட்ட அவர், அனைவரும் வாக்களிக்கவேண்டிய தேவையையும் வலியுறுத்திக் குறிப்பிட்டிருந்தார்.
சிறப்புரைநிகழ்த்திய பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள், குறித்த நிகழ்வில் இளையோர்கள் முன்னின்று பயணிப்பது பற்றிக்குறிப்பிட்ட அவர் மேமாதம் இடம்பெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கவனயீர்ப்பு நிகழ்வுகள் சேர்ஜிநகரிலும் இடம்பெறவுள்ள அதேவேளை அனைவரும் வந்து எழுச்சிக்கு வலுச்சேர்க்கவேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.
சேர்ஜி தமிழ்ச்சோலை வளர்தமிழ் 12 மாணவர்களான செல்வன் ஹெலன்குமார் பானுகோபன், செல்வி ரனேஸ் அக்சயா ஆகியோர் தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழியில் நிகழ்வினைத் தொகுத்து வழங்கியமை அனைவரையும் கவர்ந்திருந்தது.
நிறைவாக அனைவரும் ஒருமித்திருக்க நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரக மந்திரத்துடன் நினைவேந்தல் நிகழ்வு நிறைவடைந்தது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)