மியன்மாரில் பின் என்ற கிராமத்தை அந்த நாட்டு இராணுவம் தீயிட்டு எரித்துள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மியன்மாரில் கடந்த ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் தலைவராக ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இராணுவத்தினரின் ஆட்சியை எதிர்த்தும் ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும் மியன்மாரில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தப் போராட்டத்தை ஆயுதமுனையில் இராணுவம் அடக்கி வருகின்றது. இதனிடையே அப்பாவி பொதுமக்களையும் இராணுவம் சுட்டுக் கொல்கிறது என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இந்நிலையில், பின் என்ற சிறு கிராமத்துக்குள் நுழைந்த இராணுவம் அந்தக் கிராமத்தை தீயிட்டுக் கொழுத்தியுள்ளது. இந்தக் கிராமத்தில் 5,500இற்கும் மேற்பட்ட மக்கள் வசித்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர் என்று அறிய வருகின்றது. சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டபோதிலும் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை இன்றுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.