காலிமுக திடல் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு குறைவாகத்தான் இருக்கிறது. அதற்கு நியாயமான காரணமும் இருக்கிறது. பேரினவாத காயம் ஆற வேண்டும். எங்கள் காயம் பெரிது. அதற்கு நாம் மருந்து போடுகிறோம். அதனாலேயே தமிழர்களின் பங்களிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த “காலிமுக புரட்சி”தான், சமகாலத்தில் இந்த பேரினவாத கட்டமைப்பு மாற்றப்பட கிடைத்துள்ள மிகப்பெரும் சந்தர்ப்பம். ஆகவே படிப்படியாக தமிழர்கள் காலிமுக புரட்சியில் பங்கேற்கத்தான் வேண்டும்.
உள்ள சென்று சிங்கள இளைஞர்களுடன் கரங்கோர்த்து இந்த இனவாத கட்டமைப்பை மாற்ற வேண்டும். பேரினவாத கட்டமைப்பில் ஒரு பிரதான அங்கம்தான் ராஜபக்ச குடும்பம். முதலில், தமிழர்களை தாக்கி அழித்துதான் இவர்கள் ராஜாவானார்கள்.
ஆனால் முழு பேரினவாத கட்டமைப்பும் ராஜபக்சர்கள் மாத்திரமல்ல என்பதை புதிய சிங்கள தலைமுறை உணர வேண்டும். தமிழ் இளையோர் உள்ளே சென்று இதுபற்றி சிங்கள இளைஞர்களுடன் கலந்துரையாட வேண்டும்.
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் உள்ளடங்கிய இலங்கையர் அடையாளம் மேலோங்க வேண்டும். பல்லின, பன்மத, பன்மொழி நாடாக இலங்கையை அங்கீகரிக்க வேண்டும். மதசார்பின்மை ஏற்கப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி மேலோங்க வேண்டும். அதுதான் முழுமையான கட்டமைப்பு மாற்றம்.
கட்சி கட்டமைப்பில் இருக்கின்ற எம்மால் அதில் நேரடியாக பங்கேற்க முடியாது. அதற்கான காலம் வரும். ஆனால், இன்று கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் பெருந்திரளினர் இந்த “காலிமுக புரட்சி”யில் படிப்படியாக பங்கேற்கத்தான் வேண்டும் என கொழும்பு மாவட்ட எம்பியாக நான் கோருகிறேன்.
- மனோ கணேசன் – நா.உ
தலைவர் – தமிழ் முற்போக்குக் கூட்டணி