இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 இந்திய மீனவர்களும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் பாலசுப்ரமணியம் ரமேஷ்கண்ணா தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் வருகை தந்த மூன்று படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
காரைநகருக்கு அண்மித்த கடற்பகுதியில் இரண்டு படகுகளுடன் 07 மீனவர்களும் வடமராட்சி கிழக்கு
கட்டைக்காடு கடற்பகுதியில் ஒரு படகுடன் ஒன்பது மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரத்தை சேர்ந்த மூன்று மீனவர்களும் கோட்டை பட்டினத்தை சேர்ந்த நான்கு மீனவர்களும் நாகபட்டினத்தை சேர்ந்த ஒன்பது மீனவர்களுமே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் கடற்படையினரிடமிருந்து யாழ். கடற்றொழில் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது.
கைதாகியுள்ள இந்திய மீனவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் மற்றும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் பாலசுப்ரமணியம் ரமேஷ்கண்ணா குறிப்பிட்டுள்ளார்.