இலங்கை போர்க்குற்றம் தொடர்பா ஐ.நா. விசாரணை தேவையில்லை எனவும் உள்நாட்ட விசாரணை போதும் என அமெரிக்கா கூறிய கருத்தை கண்டித்து ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ அமெரிக்க அரசை கண்டித்து இன்று சென்னை எழும்பூர் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் அமெரிக்க அரசின் நிலைப்பாட்டினை கண்டித்து ஆவேசமாக கோஷம் எழுப்பினார்.
அமெரிக்க அரசின் மன்னிக்க முடியாத துரோகம் யாதெனில், நடந்து முடிந்த தமிழ் இனப் படுகொலையை முழுமையாக மறைத்து, போர்க்குற்ற விசாரணையை கொலைகார சிங்கள அரசிடமே ஒப்படைக்க முடிவு செய்ததுதான். இதை, தற்போது இலங்கைக்கு வந்துள்ள தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறைத் துணைச் செயலாளர் லிசா பிஸ்வாஸ் எனும் பெண்மணி திமிரோடு தெரிவித்து உள்ளார்.
சிங்களக் கொலைகார அரசின் ஆலோசனையின்படிதான் ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானத்தைத் தாக்கல் செய்வோம் என்றும் கூறி விட்டார்.
ஈழத் தமிழ் இனக்கொலையாளியான சிங்கள அரசாங்கத்தையே இதுபற்றி விசாரணை நடத்தும் தீர்ப்பாளியாகவும் ஆக்குவதற்கு முற்பட்டுள்ள அமெரிக்க அரசின் செயல் மன்னிக்க முடியாத துரோகச் செயல் ஆகும். ஈழத் தமிழ் இனத்தைக் கரு அறுக்க முற்பட்டுள்ள சிங்கள அரசோடு அமெரிக்க ஏகாதிபத்தியம் பகிரங்கமாகவே கைகோர்த்து விட்டது. இனி உலக நாடுகளிலும் நீதியை எதிர்பார்க்க வேண்டாம். இந்திய அரசும் இதே துரோகத்தைத்தான் செய்யப்போகிறது.