ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணைந்து புதிய கூட்டமைப்பொன்றை உருவாக்கி, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பிவிதுறு ஹெல உருமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூட்டணியின் பெயர், சின்னம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என இன்று (31) தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.மு. தோல்வியடைந்தமைக்கு அக்கட்சியின் தலைமைப் பொறுப்பிலுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளே காரணம் என இதன்போது அவர் தெரிவித்தார்.
இந்நிலைமைகளின் கீழ் ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழான ஐ.ம.சு.முவில் போட்டியிடுவதில் தயக்கத்துடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரிகள் முன்னணி மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்க ஆகியோரும் இது தொடர்பில் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.