பிரான்சில் சாவடைந்த தமிழீழக் காவல்துறை முதன்மை ஆய்வாளரின் இறுதிவணக்க நிகழ்வு நேற்று ( 02.04.2022) சனிக்கிழமை உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
காலை 9.00 மணியளவில் லாக்கூர்நொவ் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் திருப்பலி இடம்பெற்றதைத் தொடர்ந்து நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அன்னாரின் புகழுடலுக்கு அவரோடு தாயகத்தில் பணியாற்றிய தமிழீழ காவல்துறை முன்னாள் உறுப்பினர்கள் தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிப்புச் செலுத்தினர்.
தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து குடும்பத்தினர்,உறவினரோடு ஆயிரக்கணக்கான உணர்வாளர்கள், பொதுமக்கள் அணிவகுத்து மலர்வணக்கம் செலுத்தினர்.
சம நேரத்தில் கண்ணீர் மல்க நினைவுரைகள் இடம்பெற்றன.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பிலான அறிக்கையும் அதன் பரப்புரைப் பொறுப்பாளரினால் வாசித்தளிக்கப்பட்டது.
அத்தோடு உணர்வாளர்கள் பலரும் கண்ணீரோடு அன்னாரோடு தாம் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து பிற்பகல் 13.00 மணியளவில் பந்தன் மயானத்தில் அனைவரின் கண்ணீருக்கு மத்தியில் விதைகுழியில் வித்துடல் விதைக்கப்பட்டது.
தமிழீழக் காவல்துறையில் ஒரு முதன்மை ஆய்வாளராகவும் முல்லைத்தீவு மாவட்ட கண்காணிப்பாளராகவும் பணியாற்றி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம்வரை தமிழீழ மக்களோடு மக்களாக நின்று தமிழீழக் காவல்துறையின் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றி இனவழிப்பின் சாட்சியமாகவும் இருந்துவந்த திரு. இம்மானுவல் நிக்சன் ரஞ்சித்குமார் (வயது 51) அவர்கள் பிரான்சில் கடந்த (27. 03. 2022) ஞாயிற்றுக்கிழமை இதய சத்திர சிகிச்சையின் பின்னர் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சாவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(ஊடகப்பிரிவு மற்றும் எரிமலையின் செய்திப் பிரிவு)