வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய நிரவகத்தினரால் பராமரிக்கப்பட்டுவரும் வற்றாப்பளைக் கண்ணகை அம்மனின் புனித மரமாக பேணப்பட்டுவரும் பனிச்சை மரத்தின் கிளைகள் முஸ்லீம் இளைஞர்களால் இயந்திர வாளினால் அரிந்து வீழ்த்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆலய பரிபாலன சபைத் தலைவரான பொ.குகதாசன் அவர்களினால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்வதற்குச் சென்றபோது முறைப்பாட்டினை முள்ளியவளை பொலிசார் ஏற்க மறுத்துவிட்டனர்.
முள்ளியவளை முல்லைத்தீவு பிரதான வீதியில் 3ம் கட்டைச் சந்திப்பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான எல்லையில் நின்றிருந்த மரமே வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த மரத்தினைச் சுற்றி சீமேந்தினால் கட்டி அடையாளப்படுத்தி எல்லையிடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியுடன் ஆலய நிர்வாகத்தினர் முனைந்தபோது இதனை முள்ளியவளைப் பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஆலய நிர்வாகத்தினர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக கூறினர். வற்றாப்பளைப் பொங்கலை முன்னிட்டு வருடந்தோறும் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து முல்லைத்தீவு சிலாவத்தை பெரும் கடலில் தீர்த்தம் எடுத்து திரும்பும்போது இந்த பனிச்சை மரத்தின் கீழ் தீர்த்தக்குடத்தை இறக்கி வைத்து பக்தர்கள் இளைப்பாறுவது வழமையாகும் இதனாலும் வற்றாப்பளை ஆலயத்தின் வரலாற்றுடனும் இந்த பனிச்சை மரம் புனிதம் மிக்கதாக பேணப்படுகின்றது.