யாழில் தாய்மார்கள் தாக்கப்பட்டமையைக் கண்டிக்கும் நாளைய போராட்டத்துக்கு அழைப்பு!

0
258

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது தாய்மார்கள் சிறிலங்கா காவல்துறையால் தாக்கப்பட்டமையை கண்டித்து நடைபெறவுள்ள போராட்டத்திற்குக் அனைவரும் அணிதிரள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்

சிறிலங்காவின் ஆயுதப்படைகளாலும் துணை இராணுவக் குழுக்களலும் பல ஆயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். குறிப்பாக 2009 மே மாதம் இனவழிப்பு யுத்தத்தின் முடிவில் – சிறிலங்கா ஆயுதப்படைகளிடம் சரணடைந்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதியையும் பொறுப்புக் கூறலையும் எதிர்பார்த்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகப் போராடி வருகின்றார்கள்.வலிந்து

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் சிறிலங்காவில் நடைபெறப்போவதில்லை. என்பதனால் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்றினூடாக – இந்த குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மூலமாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினுடாகவோ விசாரிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்திவருகின்றனர்.

இத்தகைய பின்னணியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு காரணமான அரசின் அப்போதய ஜனாதிபதி (தற்போதய பிரதமர்) கடந்த மாதம் யாழ்ப்பாணம் வருகைதந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 2022.03.20ஆம் திகதியன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் ஜனநாயக வழியில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\

அப்போராட்டத்திற்காகச் சென்றிருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களைச் சேர்ந்த வயது முதிர்ந்த தாய்மார்கள் மற்றும் பெண்கள் மீது சிறிலங்கா பொலிஸார் மிலேச்சத்தனமான தாக்குதலை நடாத்தி, அவர்களில் சிலரது ஆடைகள் கிழிக்கப்பட்டதுடன், காயப்படுத்தப்பட்டுமிருந்தனர்.

ஜனநாயக ரீதியாக போராடிவரும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மீது சிறிலங்காப் பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டித்திருந்தது.

அதேவேளை, சிறிலங்கா பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தைக் கண்டித்தும், நீதி வேண்டிப் போராடும் உறவினர்களின் நியாயமான கோரிக்கைகளை வலுப்படுத்தும் வகையிலும் எதிர்வரும் 2022.04.03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்துள்ள கண்டனப் பேரணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவை வழங்குகின்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் நீதிக்காக போராட வேண்டியது ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்தினது பொறுப்பாகும். அக்கடமையினை உணர்ந்தவர்களாக அன்றைய தினம், யாழ்.பேருந்து நிலையத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கும் கண்டனப் பேரணியில் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் கலந்துகொண்டு மேற்படி போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு அழைத்து நிற்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here