அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலை நகரில் தமது கட்சியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் தலவாக்கலை உட்பட மலையக மக்கள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என்று தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் அழைப்புவிடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (31) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
தமிழ் முற்போக்குக்கூட்டணி என்ற ரீதியில் நாம் எதிர்வரும் 3 ஆம் திகதி தலவாக்கலையில் ஏற்பாடு முன்னெடுக்கவுள்ள அரசவிரோதப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தலவாக்கலை மக்கள் உள்ளடங்கலாக மலையக மக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுக்கின்றோம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான கூட்டணிக்கட்சி என்றவகையில் அண்மைய காலங்களில் நாம் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றோம். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக இளைஞர், யுவதிகளால் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டமும் அதே தினத்திலேயே நடைபெறவிருக்கின்றது. இரண்டும் வெவ்வேறு போராட்டங்கள் என்றாலும், அவற்றின் நோக்கம் ஒன்றாகவே இருக்கின்றது.
தற்போது அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் விரோதத்தைத் தணிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றார்கள். அதற்காக பசில் ராஜபக்ஷ மாத்திரமே சிறந்தவரல்ல என்றும், ஏனையோர் சிறந்தவர்கள் என்றும் கூறிவருகின்றார்கள். ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பெரும் நம்பிக்கையின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் தமது ஆணையை வழங்கினார்கள். அதுமாத்திரமன்றி பாராளுமன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொடுத்தார்கள். அதன்மூலம் ஏகாதிபதித்துவத்திற்கு வழிவகுக்கக்கூடிய அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தையும் நிறைவேற்றிக்கொண்டார்கள்.
சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்புவதாகக்கூறி ஆட்சிப்பீடமேறிய அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் வெகுவாக அதிருப்தியடைந்திருக்கின்றார்கள். சிறிமாவோ பண்டாரநாயக்க நாட்டை ஆட்சிசெய்த காலத்திலும் பொருட்;களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததாக சிலர் கூறுகின்றனர்.
ஆனால் உண்மையிலேயே அதற்கும் தற்போதைய நிலைவரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதும், முன்னெப்போதுமில்லாததுமான நெருக்கடிக்குத் தற்போது நாடு முகங்கொடுத்திருக்கின்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் சரியான தலைவரின் வருகைக்காக மக்கள் வெறுமனே காத்துக்கொண்டிருக்கக்கூடாது. மாறாக அதுவரை மக்கள் தமது போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லவேண்டும். எனவே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (3) நடைபெறவிருக்கும் போராட்டத்தைப் புறக்கணிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் .