கிண்ணியா, உப்பாறு பாலத்துக்கு அருகில் உந்துருளிமீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்று (30) புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் மூதூர், இறால் குழி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான 42 வயதான ஜோதிமணி என்பவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு சென்று மீண்டும் திருகோணமலை நோக்கி உந்துருளியில் வந்து கொண்டிருந்த குறித்த பெண், கிண்ணியா – மட்டக்களப்பு பிரதான வீதியில் உப்பாறு பாலத்துக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த போது, பின்புறமாக வந்த பேருந்து அவரை முந்திச்செல்ல முற்பட்டபோது உந்துருளியில் மோதியதாகவும் இதனையடுத்து சம்பவ இடத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பிலான விசாரணைகளை கிண்ணியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.