எமது விடுதலைப்போரின் படைய இயங்குநிலை மௌனிக்கப்படும் வரை, எம்மக்களின் பலநூறு உயிர்களை தன் தோள்களில் தாங்கி காத்த இந்த மாவீரனை எம் தோள்களில் தூக்க முடியவில்லையே முடியவில்லையே……..!
ஈழப்போரின் இறுதி மாதங்களில் அதுவரை அந்த ரணத்திற்குள் வாழ்ந்துவந்த மக்களில் சில இலட்சம்பேரது நாளாந்த வாழ்க்கையும் பதுங்கு குழிகளுக்குள்ளேயே அதிகம் நகர்ந்துபோயின…..
ஆனால் இந்த மாவீரன் உள்ளிட்ட சில மகத்தான காவல் வீரர்கள் மட்டும் அந்த பதுங்குகுழி வாழ்க்கையை கடந்து,தம்முயிர் போகும்போது போகட்டுமென தம்சாவை துறந்து போரின் உடனடி காயங்களால் பரிதவித்த எம் மக்களையும், போராளிகளையும் உலகின் கற்பனையில் தோன்றிய ஸ்பைடமான்களாக நிஜத்தில் தமை மாற்றி, எதிரியின் குண்டுமழையினால் கீறிக் குதறப்பட்ட குற்றுயிர்களை மீட்டுவந்ததொன்றும் வெறும் கற்பனை கதைகள் கிடையாது.
ஒரு சந்தர்ப்பத்தில் சுதந்திரபுரம் சந்தியில் அமைந்திருந்த நிரோஜன் விளையாட்டுத்திடலில் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட உயர் பாதுகாப்புவலையம் மீது,அவர்களே திட்டமிட்டு நடத்திய பாரிய எறிகணை தாக்குதல்களின் விளைவாக பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் அங்கு கொல்லப்பட்ட சந்தர்ப்பத்திலும், தொடர்ந்தும் வெடித்துக்கொண்டிருந்த எறிகணைகள் மத்தியிலும் அங்கு அதுவரை சாகாமல் துடிதுடித்து பரிதவித்தவர்களை மீட்பதற்காக மின்னல் வேகத்தில் வருகைதந்து அவர்களை தமது தோள்களில் தாங்கி மருத்துவ நிலையங்களுக்கு கொண்டுசென்றவர்களும் இந்த காவல் ஸ்பைடமான் வீரர்கள்தான் என்பதை எம் நெஞ்சம் என்றுமே மறக்காது.
எம்மக்கள் போரின் மத்தியில் வாழ்ந்து முடித்த அத்தனை நாட்களிலும் அங்கே காயப்பட்ட எமது மக்களின் உண்மை காவல் தெய்வங்களாக வலம்வந்தவர்களில் இந்த மாவீரனும் ஒருவன் என்பதை எவராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.
மாவீரன் என்பவன் தன் எதிரியிடமிருந்து தான் நேசித்த மக்களை காப்பவனாக இருக்கவேண்டும் என்பதற்கு தன்னை மறந்து தன் இனத்திற்காக வாழ்ந்துகாட்டிய இந்த உத்தம வீரனும் எமக்கு சிறந்த முன்னுதாரணம் என்ற பெருமையோடு, இந்த மாவீரனின் பிரிவை இங்கே நினைவுகூர்ந்து எங்களுடைய ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறோம்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பின்லாந்து.