தமிழீழக் காவல்துறையின் முன்னாள் ஆய்வாளர் ரஞ்சித்குமார் பிரான்சில் சாவடைந்துள்ளார்!

0
478

தமிழீழக் காவல் துறையில் ஒரு முதன்மை ஆய்வாளராகவும் முல்லைத்தீவு மாவட்ட கண்காணிப்பாளராகவும் பணியாற்றி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம்வரை தமிழீழ மக்களோடு மக்களாக நின்று தமிழீழக் காவல்துறையின் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றி இனவழிப்பின் சாட்சியமாகவும் இருந்துவந்த திரு. இம்மானுவல் நிக்சன் ரஞ்சித்குமார் (வயது 51) அவர்கள் பிரான்சில் இன்று (27. 03. 2022) ஞாயிற்றுக்கிழமை சாவடைந்துள்ளார்.

 

யாழ்.குருநகரைப் பிறப்பிடமாகக்கொண்ட ரஞ்சித்குமார் அவர்கள் தமிழீழக் காவல்துறையில் முதலாம் அணியில் பயிற்சி பெற்றிருந்தார். 1991 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி தமிழீழக் காவல்துறையில் இணைந்துகொண்டார். பயிற்சியின் நிறைவின் பின்னர் யாழ்.சுன்னாகம் பகுதியில் இயங்கிய காவல்பணிமனையில் ஓர் உப பரிசோதகராக தனது கடமையை ஆரம்பித்து, பின்னர் யாழ்.சாவகச்சேரியில் இயங்கிய காவல்துறை பணிமனைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அதன்பின்னர் வன்னிப் பெருநிலப்பரப்பில் தனது கடமைகளைப் புரிந்துள்ளார். அதாவது, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் பணியாற்றியுள்ளார்.

 


போர்நிறுத்தகால புரிந்துணர்வு ஒப்பந்தம் 2002 கைச்சாத்திட்ட வேளையில், இவர் கிளிநொச்சி மாவட்டத்திற்குப் பொறுப்பாக இருந்துள்ளார். அதன்பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்காணிப்பாளராக இறுதிவரை பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தவிர்க்கமுடியாத காரணங்களினால் புலம்பெயர்ந்து பிரான்சு மண்ணில் வாழ்ந்தாலும் அவருடைய சிந்தனைகள் அனைத்தும் தமிழீழம் நோக்கியதாகவே அமைந்திருந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிரான்சில் உள்ள ஈழமுரசு இதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதில் அவர் தனது உள்ளக் கிடக்கைகளை வெளிக்கொண்டு வந்திருந்தார்.


அவருடைய இழப்பு என்பது தமிழீழத் தேசியத்தில் இட்டு நிரப்பப்படாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.
மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசு எமது தாயகத்திற்கு வரும் வரை எமது மக்களைக் காப்பாற்றவேண்டியது தாயக, புலம்பெயர் மக்களின் கடமை என்பதையே அவர் அனைவருக்கும் உறுதியாகக் கூறியிருந்தார்.


அண்மையில் கூட அவர் ஜெனிவா செல்வதற்காகவே, மூன்றாவது தடுப்பூசியை ஏற்றியிருந்த நிலையிலேயே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு, சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
(எரிமலையின் செய்திப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here