தமிழ்மக்கள் அதிகம் வாழும் 93 மாவட்டத்தில் நியூலிசூர்மார்ன் நகரத்தில் மாநகரசபை மண்டபத்தில் நேற்று 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நகரபிதாவுடன் தமிழீழ மக்களின் சந்திப்பு நடைபெற்றது.
அந்த மாவட்டத்தின் நாடளுமன்ற உறுப்பினர் M. Patric Anato அவர்கள் நியூலிசூர்மாறன் பிராங்கோ தமிழ்ச்சங்கத்திடம் விடுத்திருந்த வேண்டுகோளுக்கமைய தமிழ்மக்களின் சந்திப்பை தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. காலை 11.00 மணி முதல் நாடாளுமன்ற உறுப்பினருடனான கலந்துரையாடலும், அதன் பின் வருகைதந்த முதல்வர் Zartoshte BAKHTIAI அவர்களுடனும் கலந்துரையாடல் நடைபெற்றது.
தொடர்ந்து இந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் தேவைகள் பற்றி தமிழ் மக்கள் தெரிவித்திருந்தனர். அதில் முக்கியமாக எமது தாய்மொழிக்கல்வியும், கலைகளையும் கற்றலுக்கான இடம், எமது இளையவர்களின் உடல் உள ஆரோக்கியத்திற்கான விளையாட்டுத்திடல்கள், இங்கு இருக்கும் வர்த்தகர்கள், மற்றும் இங்கு வசதிகுறைந்தோருக்கு இருக்கும் பிரச்சனைகள், தனிமனிதர்களின் தேவைகள் பற்றி பாராளுமன்ற உறுப்பினரிடமும், மாநகர முதல்வரிடமும் தமிழ் மக்கள் தெரிவித்திருந்தனர். குறிப்பாக இங்கு இருக்கும் இளையவர்கள் தமது ஆக்கபூர்வமான தேவைகளை தங்களுக்குச் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். பொது மக்களும், பெற்றோர்களும் நிலைமைகளை தேவைகளை சொல்லியிருந்தனர். குறிப்பாக இளையோர் அமைப்பின் உறுப்பினர்கள், தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியல் பிரிவு கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். காலத்தின் தேவையறிந்தும், இங்கு வாழும் தமிழ் மக்களின் ஒற்றுமையை தெரிவிக்கும் வகையிலும் குறுகிய காலத்தில் செய்யப்பட்ட இக்கலந்துரையாடல் ஏற்பாட்டில் பல்வேறு விடுமுறை நிகழ்வுக்கும் மத்தியிலும் தமது பிள்ளைகளின் நலன்கருதி தமிழ் மக்கள் கலந்துகொண்டமை இன்றைய சந்திப்பில் காத்திரமாக அமைந்திருந்தது.
பிரான்சு நாட்டில் வரும் நாட்களில் நடைபெறப்போகும் பிரான்சு அதிபர் தேர்தல், மற்றும் அதனைத் தொடர்ந்து வரப்போகும் பாராளுமன்றத் தேர்தல்களும் அதில் பிரான்சு நாட்டில் வாழும் தமிழ்மக்களின் வாக்குகள் மிகுந்த பலம்வாய்ந்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தீர்மானிக்கும் சக்கியாக இருப்பதை அரசியல் வாதிகள் நன்கு புரிந்து கொண்டு அவர்கள் தமது பங்கை அரசியல் ராஜதந்திரரீதியாக காய்நகர்த்தி வருவதும் தமிழ் மக்களும் அதனூடாகத் தமது நீண்டகால அபிலாசைகளை அடைந்திடும் ஒரு வழியாக இவற்றைக் கடைபிடிக்க வேண்டியதும் ஒரு வரலாற்றின் கடமையாகவே பார்க்கப்படுகிறது. இன்றைய சந்திப்பும் அதனையே உணர்த்தி நிற்கிற போதும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் இவ்வாறான சந்திப்புகள் புரிந்துணர்வுகள் தமிழ் மக்களின் வாழ்வுக்கும், இருப்புக்கும் பெரும் பங்களிப்பை வரும் காலங்களில் அவசியமாகவே கருதப்படுகின்றது. அதில் தமிழ் மக்களும், இளையவர்களும் தற்போதைய கால அரசியல் நீரோட்டத்தில் கலந்து பயணிப்பதே எதிர்காலத்தில் தமிழ் மக்களின் தேவைகளையும் அபிலாசைகளை அடைந்திட வழியேற்படுத்தும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
(ஊடகப்பிரிவு – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு)