புதுடில்லிக்குச் சென்ற சிறிலங்கா நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து உரையாடிய பின்னர் தமிழ்- முஸ்லிம் மக்களின் தாயகமான வடக்குக் கிழக்கில் உள்ள வளமுள்ள பிரதேசங்களை இந்தியா கையாள்வதற்குரிய வசதிகளுக்கான வாக்குறுதிகளை நேரடியாகவே வழங்கியுள்ளார். இதன் பின்னரே இலங்கைக்கு ஒரு பில்லியன் நிதியுதவி வழங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா இலங்கையுடன் கைச்சாத்திட்டிருக்கின்றது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக புதுடில்லியும் கொழும்பும் செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தாலும் முழுமையான விவரங்கள் அதில் இல்லை. ஆனாலும் டில்லி உயர்மட்டத்தில் இருந்து சில விடயங்கள் கசிந்திருக்கின்றன.
திருகோணமலையிலுள்ள சம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மன்னார், பூநகரி மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் சூரிய சக்தி திட்டங்களை மேற்கொள்ளவும் இந்தியாவிற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. அதானி குடும்பத்திற்கு வழங்க விருப்பம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் அமைச்சர் பசில் ராஜபக்ச புதுடில்லிக்குச் சென்று வந்ததன் பின்னர், ஜனவரி முதல், 1.4 பில்லியன் டொலர்களை கொழும்பிற்கு இந்தியா வழங்கியுள்ளது.
இதில் 500 மில்லியன் டொலர், 400 மில்லியன் நாணய பரிமாற்றம் மற்றும் ஆசிய கிளியரிங் யூனியனுடன் (Asian Clearing Union) கடன் ஒத்திவைப்புக்காக 500 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
2.4 பில்லியன் டொலர்களை வழங்குவதாக இந்தியா கடந்த டிசம்பர் மாதம் உறுதியளித்திருந்தது. ஆனால் ரசிய- உக்ரெய்ன் போர் ஆரம்பித்ததால் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நடவடிக்கை பிற்போடப்பட்டது. இருந்தாலும் நேற்று வியாழக்கிழமை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் அதி உச்ச விருப்பமாகப் பசில் ராஜபக்சவிடம், ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
ஆனால், சில தமிழ்த்தேசியக் கட்சிகள் குறைந்த பட்சமாகக் கோருகின்ற முழுமையான சமஸ்டி ஆட்சி முறை பற்றிக்கூட அங்கு பேசியதாகத் தெரியவில்லை.
13 பற்றிய விவகாரமும் சும்மா ஒப்பாசாரத்துக்காகப் பேசப்பட்ட ஒன்றே.
ஆனால், பசில் ராஜபக்சவுடன் இந்தியாவின் புவிசார் அரசியல் நலனுக்காகப் பேரம் பேசப்பட்ட விவகாரங்களே அதிகமாகத் தென்படுகின்றன. ஏலவே கொழும்புடன் பேரம் பேசி இணங்கிய விடயங்களையே பசில் ராஜபக்ச டில்லியில் நேரடியாகத் தலையசைத்திருக்கிறார்.
குறிப்பாகச் சீனாவை மையமாகக் கொண்ட இந்தோ- பசுபிக் பாதுகாப்புக்காகத் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசங்களான வடக்குக் கிழக்கில் பல பிரதேசங்களைத் தாரைவார்ப்பதற்கான ஒப்புதலுடனேயே ஒரு பில்லியன் டொலரை நிதியுதவியாகப் பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றதென டில்லிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
2.4 பில்லியன் தொகையில், முதற் கட்ட உதவிக்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக கொழும்பில் உள்ள நிதியமைச்சு இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஆனால், விவரங்கள் எதுவுமே கூறப்பட்டிருக்கவில்லை.
திருகோணமலை துறைமுகத்தைச் சுற்றி இந்தியாவின் மூலோபாய நலன்களை வலுப்படுத்தும் கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவது தொடர்பாக இலங்கை- இந்தியாவுக்குத் தனது எதிர்ப்பின்மையை வெளிப்படுத்தியிருக்கின்றது.
அத்துடன் திருகோணமலை துறைமுக சூழலில் கப்பல் பழுதுபார்க்கும் தளம் ஒன்றை நிறுவுவதற்கும் அமெரிக்க கடற்படையின் முயற்சியான பஹ்ரைனை தளமாகக் கொண்ட உளவுத்துறை பகிர்வு அலுவலகதில் (Intelligence Fusion Centre) கடற்படை அதிகாரி ஒருவரை நியமிக்கவும் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலையிலுள்ள சம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மன்னார், பூநகரி மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் சூரிய சக்தி திட்டங்களை மேற்கொள்ளவும் இந்தியாவிற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது அதற்குரிய வேலைத் திட்டங்களை அதானி குடும்பத்திற்கு வழங்க விருப்பம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அயல்நாடு என்ற அடிப்படையில் ஒப்பாசாரத்துக்காக 13 பற்றிப் பேசிவிட்டு முற்று முழுதாகத் தனது அரசியல், பொருளாதார நலன்களை அதுவும் இலங்கையில் சீன ஆதிக்கத்துக்கு எதிரான செயற்பாடுகளை மையப்படுத்தி வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் இந்திய முதலீடுகளுக்குள் என்ற போர்வையில், தமிழர் பிரதேசங்கள் இந்தியக் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளதெனலாம்
இந்தியாவின் வணிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தைபயன்படுத்தவும் இலங்கை உடன்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் கலாசார திட்டங்களைச் செயற்படுத்தவும் இந்தியாவிற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே, இலங்கை தற்போது எதிர்நோக்கியிருக்கும் நிதி நெருக்கடியைப் பயன்படுத்தி அமெரிக்க- இந்திய அரசுகள் தமது இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களையே முன்னிலைப்படுத்தும் என்பது ஏலவே தெரிந்த ஒன்றுதான்.
ஆனாலும் இலங்கைத் தீவின் நெருக்கடிக்குக் காரணமான உண்மைக் காரணிகளைக் கண்டுபிடித்து நிதியைக் கையளிக்கும் நிலையில் அமெரிக்க- இந்திய அரசுகள் இல்லை.
இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை அயல்நாடு என்ற அடிப்படையில் ஒப்பாசாரத்துக்காக 13 பற்றிப் பேசிவிட்டு முற்று முழுதாகத் தனது அரசியல், பொருளாதார நலன்களை அதுவும் இலங்கையில் சீன ஆதிக்கத்துக்கு எதிரான செயற்பாடுகளை மையப்படுத்தி வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் இந்திய முதலீடுகளுக்குள் என்ற போர்வையில், தமிழர் பிரதேசங்கள் இந்தியக் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளதெனலாம்.
இதற்காக இந்திய- இலங்கை ஒப்பந்தம் நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஆகவே ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் 13 ஐ வலியுறுத்தி இந்தியப் பிரதமருக்குக் கையளித்த கடிதத்தின் அறிவுறுத்தல் அரசியல் (Instruction politics) இப்போது பலருக்கும் புரிந்திருக்கும்.
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதன்கிழமை இரவு இலங்கைத்தீவு மக்களுக்கு வழங்கிய தனது உரையில் அது பற்றிக் கூறியிருந்தார்.
ஆனால், பசில் ராஜபச்சவுடன் உரையாடிய பின்னர், இந்தியா வழங்கியுள்ள நிதியுதவிகள் மற்றும் வழங்கவுள்ள நிதியுதவிகளுக்கான பேச்சுக்களின் அணுகுமுறையை நோக்கினால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கையைப் பிணை எடுப்பது போன்றதொரு தன்மையைக் காண முடிகின்றது.
இலங்கையிடம் இருந்து இந்தியா உத்தரவாதங்களைப் பெற்றிருக்கின்றதே தவிர இலங்கைக்கு நிபந்தனைகள் எதனையும் விதித்ததாகத் தெரியவில்லை. இந்தியத் திட்டங்களுக்கு இலங்கை அனுமதியளித்துள்ளது.
இந்தியாவின் அயல்நாட்டு முதற்கொள்கை மற்றும் கடல்சார் அதாவது பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற கோட்பாட்டில் இலங்கைக்கு முக்கிய பங்கு உண்டு என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
பௌத்த மற்றும் ராமாயண சுற்றுலாக்களை கூட்டாக ஊக்குவிப்பது உட்பட, இருதரப்பு சுற்றுலாப் பயணிகளை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் மோடி இந்த ஒப்பந்தத்தின் பின்னர் வெளியிட்டிருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி மற்றும் காங்கேசன்துறையில் உள்ள இரண்டு ‘இணைப்பு’ திட்டங்களை விரைவாக முடிக்க இலங்கைக்கு இந்தியா ‘அழுத்தம் கொடுப்பதாக’ இந்திய உயர்மட்ட அதிகாரியொருவர் கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் (indianexpress.com) என்ற ஆங்கிலச் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
தமிழர் தாயகமான வடமாகாணத்தில் உள்ள தலைமன்னார் மற்றும் தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் இடையே படகு சேவையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இந்திய- இலங்கை அரசுகள் பரிசீலிக்கின்றன.
பலாலி விமான நிலைய ஓடுபாதையின் ஒரு பகுதி மறுசீரமைப்பிற்குப் பின்னர். 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சென்னையில் இருந்து பொதுமக்கள் விமானங்களுக்குத் திறக்கப்பட்டது, ஆனால் கொவிட் 19 தொற்றுநோய்த் தாக்கத்தால் அது மூடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை வசதியை மீண்டும் திறப்பதற்கான அறிகுறியை இலங்கை இதுவரை வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் பலாலி விமான நிலைய ஓடுபாதை மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் அதன் நீளத்தை அதிகரிக்க இந்தியா உதவியது. மேலும் ஓடுபாதை மேம்பாட்டிற்கு உதவுவதாக இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு 2018 ஆம் ஆண்டு இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. இதனையடுத்து எக்ஸிம் வங்கி சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், விரிவானத் திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கும், புவிசார் மற்றும் இட அமைவுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் மற்றும் சிதைவுகளை அகற்றுவதற்கும் நிதி வழங்கியது. ஆனால், அந்தத் திட்டத்தில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரானவொரு சூழலிலேயே இந்தியா இத் திட்டங்கள் குறித்துக் கூடுதல் கவனமும் செலுத்தியிருந்தது.
தமிழர் ஒரு தேசமாகச் சிந்தித்து ஒருமித்த கருத்துடன் ஒன்றுபடாதவரை வல்லரசுகளின் இப்படியான புவிசார் நலன் அரசியல் நகர்வுகளுக்குள்ளேதான் தமிழர்களின் அரசியல் விடுதலையும் அமுங்க வேண்டிய ஆபத்தானதொரு நிலை தொடரும்
மற்றொரு திட்டமான திருகோணமலை எண்ணெய் தாங்கிப் பண்ணையின் கூட்டு அபிவிருத்திக்கான ஒப்பந்தத்தில் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்டிருந்தன.
இதன் பின்னணியிலேயே ஈழத்தமிழர் விவகாரத்தை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசு வகுத்திருக்கின்றது. அதாவது சிங்கள மக்கள் கோபப்படாத அணுகுமுறையையும் ஈழத்தமிழர்கள் எப்படியாகிலும் திருப்திப்படுத்தி விடலாமென்ற நம்பிக்கையோடும் இந்தியா இத் திட்டத்தை முன்னெடுத்திருக்கின்றது.
ஆகவே கடந்த ஆண்டு யூன் மாதம் நிதியமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன்னர் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்ச அங்கிருந்து சுமந்திரன் மற்றும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளோடு உரையாடியதன் தொடர்ச்சியாகவே இதனை அதவதானிக்க வேண்டும்.
குறிப்பாக 13 பற்றி செல்வம் அடைக்கலநாதன் நடத்திய பேச்சுக்களும் சுமந்திரன் தலைமையிலான குழு அமெரிக்காவுக்கச் சென்று வந்ததன் பின்னணியும் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் சில உறுப்பினர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகம் சென்று வந்ததையும் நோக்க வேண்டும்.
ஆகவே, தமிழர் ஒரு தேசமாகச் சிந்தித்து ஒருமித்த கருத்துடன் ஒன்றுபடாதவரை வல்லரசுகளின் இப்படியான புவிசார் நலன் அரசியல் நகர்வுகளுக்குள்ளேதான் தமிழர்களின் அரசியல் விடுதலையும் அமுங்க வேண்டிய ஆபத்தானதொரு நிலை தொடரும்.
(நன்றி: இணையம்)