யாழ். மீசாலையில் பள்ளியில் பிள்ளைகளை அழைத்துவர உந்துருளியில் சென்ற தாய் மீது முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் 3 நாட்களின் பின்னர் குறித்த தாயார் உயிரிழந்துள்ளார்.
விபத்து ஏற்படுவது தற்செயலானது, ஆனால் இன்று விபத்தை ஏற்படுத்துவதற்கென்றே வாகனங்களை செலுத்துகின்றார்கள்.
சிலரின் கவனயீனம் பல குடும்பங்களைச் சிதைத்து விடுகிறது. மூன்று பிள்ளைகளை நாதியற்றவர்களாக்கிவிட்டுள்ளது இந்த விபத்து.
மீசாலைப் பகுதியில் விபத்தில் சிக்கிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மீசாலை ஐயா கடையடிப் பகுதியில் உந்துருளியில் சென்றுகொண்டிருந்த பெண் மீது முச்சக்கரவண்டி மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்து காணப்பட்ட அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து அழைத்துவரச் சென்றபோதே அவர் விபத்தில் சிக்கியுள்ளார்.
விபத்தால் உயிரிழந்தவர் மீசாலை வடக்கினைச் சேர்ந்த சிறீதரன் செல்வராணி (வயது 52) என்பவராவார்.
விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி தப்பிச் சென்றுள்ள நிலையில் முச்சக்கரவண்டி குறித்த தகவல் தருமாறு சாவகச்சேரி காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.