ரஷ்யாவுக்கு எதிராகச் செயல்படுவோருக்கு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சொந்த நாட்டைப் புறக்கணித்து மேற்கத்திய நாடுகளை ஆதரிப்போரை அவர் துரோகிகள் என்று வர்ணித்தார்.
அவர்களைக் கொண்டே ரஷ்யாவை அழிக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிடுவதாக அவர் குறிப்பிட்டார். துரோகிகளுக்கும் தேசபக்தர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை ரஷ்யர்களால் உடனே சொல்லிவிட முடியும் என்றார் அவர்.
ரஷ்யாவில் பணம் சம்பாதித்து ஆனால் மனதளவில் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவு தருவோருக்குத் புட்டின் கண்டனம் தெரிவித்தார்.
பல்லாண்டுகளாக, உள்நாட்டு விவகாரங்களை எதிர்ப்போர் மீது ரஷ்யா கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது.
புட்டினின் ஆட்சியின் கீழ் முதல் பிரதமராக இருந்தவரும், எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான மிக்கைல் காசியநோவ் ரஷ்ய ஜனாதிபதியின் கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்தார்.
ரஷ்யாவை அழிக்க புட்டின் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாக அவர் சொன்னார். அதை எதிர்ப்போர் மீது பெரிய அளவில் அடக்குமுறை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்பதையே புட்டின் அறிவிப்பு காட்டுவதாகவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டார்.