உக்ரைன் மீது கடந்த பிப். 24ம் தேதி முதல் ரஷ்யா படைகள் தொடர் ராணுவத் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதுதொடர்பாக, சர்வதேச நீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு உக்ரைன் முறையிட்டது. இதை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், உக்ரைன் மீது தொடங்கப்பட்ட சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை ரஷ்ய கூட்டமைப்பு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகையில், ‘சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிரான வழக்கில் உக்ரைன் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது. ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சர்வதேச சட்டத்துக்கு கட்டுப்பட்டது. ரஷ்யா இந்த உத்தரவுக்கு உடனடியாக இணங்க வேண்டும். உத்தரவை உதாசீனப்படுத்தினால் ரஷியாவை அது மேலும் தனிமைப்படுத்தும்’ என்றார்.
இந்த நிலையில், உக்ரைனில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என்று ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சர்வதேச நீதிமன்ற உத்தரவை நிராகரித்த ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கீவ்வில் குடியிருப்புகள் மீது இன்றும் தாக்குதலை நடத்தி வருகிறது.உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை நிறுத்த ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா.சபையில் ரஷ்யா கொண்டு வந்துள்ள மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ஆதரிக்குமாறு அதன் உறுப்பினர்களுக்கு ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று மீண்டும் அவசரமாக கூடுகிறது.