வன்னி மண்ணை சூறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனமாக விளங்கிய லெப்.கேணல் ரவி!

0
282

வன்னிமண்ணில் திரு.திருமதி குமாரவேல் இணையருக்கு அன்பு மகனாய்ப் பிறந்த லெப்.கேணல் ரவி 1986ஆம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்துகொண்ட தொடக்க காலங்களில் லெப்.கேணல் ரவி அவர்கள் வன்னியின் மூத்த தளபதி மாவீரர் மேஜர் பசிலனுடன் இணைந்து சிறிலங்கா படைகளிற்கு எதிராக முனைப்பான தாக்குதல்களை மேற்கொண்டு, வன்னி மண்ணை சூறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கினார்.

அமைதி காக்கவென வந்து எம்மண்ணில் அவலத்தை விதைத்த இந்தியப் படைகளுக்கு எதிராக உறுதியான எதிர்ப்புச்சமர் புரிந்தார். உலகின் நான்காவது பெரிய பலம் வாய்ந்த படைகளின் போர்க்கருவிகள் பலவற்றையும் கைப்பற்றி எமது படைபலத்தை பெருக்கிச் சாதனை படைத்தார்.

மாங்குளம் தளத்தைத் தாக்கி அழித்த நடவடிக்கைகளிலும் காத்திரமான பங்கை வகித்தார். சிறீலங்கா முப்படைகளும் இணைந்து நடத்திய பலவேகய-2 படை நடவடிக்கையின் போது வெட்டவெளிகளிலும், உவர் நிலங்களிலும் நின்று சமராடினார். எதிரிக்குச் சாதகமான நிலப்பரப்பில் மன உறுதி ஒன்றையே காப்பரணாக வைத்து லெப்.கேணல் ரவி களமாடிகொண்டிருக்கையில் எதிரியின் துப்பாக்கிச் சூடுபட்டு கையில் விழுப்புண்ணடைந்தார்.

1993ல் யாழ்தேவி நடவடிக்கையின் போது இடம் பெற்ற டாங்கிகள் தகர்ப்பினை முன்னின்று வழிநடத்தினார். தமிழீழ விடுதலை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படையியல் நடவடிக்கைகளில் ஒன்றான பூநகரி படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின் போது வன்னி மாவட்ட படையணிகளின் இரண்டாவது பொறுப்பாளனாகக் கடமையாற்றினார். திறம்பட போராளிகளை வழிநடத்தி தவளை நடவடிக்கையின் வெற்றிக்கு வலுச்சேர்த்தார்.

பூநகரிப் படைத்தளத் தாக்குதலின் பின்னர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் லெப்.கேணல் ரவி வன்னி மாவட்ட சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் சிறப்புத் தளபதியாக இருந்த வேளையில் வவுனியா புறநகர்ப் பகுதியில் சிங்களப் படையின் பவள் கவசஊர்தி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறிப்பிடத்தக்க தாக்குதலாகும்.

எண்ணற்ற தாக்குதல்கள், எண்ணிறைந்த வெற்றிகள் என சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருந்த சிறப்புத் தளபதி தாக்குதலொன்றிற்கான ஒத்திகை ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அவ்வேளையில் 17-03-1994 அன்று இடம்பெற்ற வெடிவிபத்து வன்னியின் சிறப்புத்தளபதி லெ.கேணல் ரவியோடு, கப்டன் சேந்தனையும் வன்னித் தாயின் மடியில் உறங்க வைத்துவிட்டது. உயிர் உடலில் இருக்கும் வரையும் தாயக மீட்பு ஒன்றையே சிந்தையாகக் கொண்டு சுழன்ற மறவன் லெப்.கேணல் ரவி ஆவர்.

எரிமலை இதழ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here