இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை போதுமானது என அமெரிக்கா தெரிவித்தமைக்கு பாட்டாளி மக்கள் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பைக் கண்டிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சீனாவிற்கு ஆதரவானவர் என்பதால் அவரைப் பதவி நீக்குவதற்கு இலங்கை தமிழர் பிரச்சினையைக் கையிலெடுத்த அமெரிக்கா, தற்போது தனக்கு சாதகமானவர்கள் ஆட்சிக்கு வந்ததும் தனது சொந்த முகத்தைக் காட்டுவதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளதாக தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் பன்நாட்டு விசாரணை தேவை என வலியுறுத்தி , ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு பசுமை தாயகம் சார்பில் மனு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு தொடர்பில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தாம் வலியுறுத்தவுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸ் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் அமெரிக்க அரசின் போக்கினைக் கண்டித்து எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.