உக்ரைனில் ஒன்பது மனிதாபிமானப் பாதைகளைத் திறப்பதற்கு முயற்சி!

0
343

ரஷ்ய படையிடம் சிக்கி இருக்கும் பொதுமக்களை வெளியேற்றுவதற்கு ஒன்பது மனிதாபிமான பாதைகளை திறப்பதற்கும் முற்றுகையில் இருக்கும் மரியுபோல் நகருக்கு மனிதாபிமான விநியோகங்களை வழங்குவதற்கும் உக்ரைன் திட்டமிட்டுள்ளது.

தொடர்ச்சியான குண்டு வீச்சுக்கு இலக்காகி வரும் முற்றுகை நகரான மரியுபோலில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் நிலவறைகள் மற்றும் கட்டட இடிபாடுகளில் அடைக்கலம் பெற்றுள்ளனர். அங்கு ஒரு வாரத்திற்கு மேலாக நீர் மற்றும் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. நகரில் இருந்து வெளியேறும் முதல் வாகனத் தொடரணிக்கு கடந்த திங்கட்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது.

‘முதல் இரண்டு மணி நேரத்தில் 160 கார்கள் வெளியேறின’ என்று மரியுபோல் நகர சபை பிரதிநிதியான அன்ட்ரேய் ரெம்பெல் தெரிவித்துள்ளார்.

நகரில் ரஷ்ய ஷெல் வீச்சுகள் காரணமாக இதுவரை 2,300 மற்றும் 20,000க்கும் இடைப்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக உள்ளுர் நிர்வாகம் குறிப்பிட்டபோதும் அதனை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று சூரியோதயத்திற்கு முன் தலைநகர் கியேவில் சக்திவாய்ந்த வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. கியேவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

ஒடெசா, செர்னிஹிவ், செர்காசி மற்றும் ஸ்மைல் என பல பகுதிகளிலும் வான் தாக்குதல் சைரன் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.

வடக்கு உக்ரைனில் தொலைக்காட்சி கோபுரம் ஒன்றின் மீது கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்திருப்பதாக வட பிராந்திய அரசின் ஆளுநர் லிட்டாலி கொவால் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நேற்று இடம்பெற்றது. இரு தரப்பும் கடந்த திங்கட்கிழமை வீடியோ வழியாக பேச்சுவார்த்தை நடத்தியபோதும் அதில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.

கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைன் மீதான படையெடுப்புக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டது தொடக்கம் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளில் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here