கனடாவின் டொரோண்டோ நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் ஐவர் உயிரிழந்துள்ளனர் என கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் ஐவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர் எனவும் இரண்டு மாணவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் 5 பேரும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து இந்தியத் தூதர் அஜய் பிசாரியா தனது ருவிற்றர் பக்கத்தில் ‘‘ நெஞ்சை பதறவைக்கும் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். டொரன்டோவில் உள்ள இந்திய தூதரகம், பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்கும்’’ என்று பதிவிட்டுள்ளார்.