மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சர்ச்சைக்குரிய கிணற்றை இன்று மாலை மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா நேரில் சென்று பார்வையிட்டார். கடந்த 26 ஆம் திகதி மாலை 3 மணியளவில் மன்னார் நீதவான் முன்னிலையில் கிணறு அடையாளம் காணப்பட்டது.
இதன்போது காணாமல் போனவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான நிரஞ்சன் மற்றும் ரணிதா ஆகியோரும்இ மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எம்.சபூர்தீன் உற்பட சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,ஜெபநேசன் லோகு, ஆகியோர் அங்கு சென்றிருந்தனர். இதன் போது போக்குவரத்திற்காக இப்பாதை மூடப்பட்டு கிணற்றை அடையாளப்படுத்துவதற்கு இங்கு காணப்படும் பற்றைக்காடுகள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் குறித்த கிணறு அடையாளப்படுத்தப்பட்டு அதனை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று நிள அளவை திணைக்கள அதிகாரிகள், மன்னார் பிரதேச சபை ஆகியோரின் உதவியுடன் குறித்த பகுதி சுத்தப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் காணப்படும் சர்ச்சைக்குரிய கிணறு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை 2.30 மணியளவில் குறித்த கிணற்றை அடையாளப்படுத்தி பார்வையிட்டு அதனை பாதுகாப்பதற்கான நேரம் நீதவானால் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை 2.45 மணியளவில் சட்டத்தரணிகள், பொலிஸ் நிலைய அதிகாரிகள்இ நிள அளவை திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் மன்னார் நீதவான் கண்டுபிடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கிணற்றை பார்வையிட்டார்.
குறித்த சர்ச்சைக்குரிய கிணற்றை பார்வையிட்ட நீதவான் குறித்த இடத்தை பாதுகாக்குமாறும், எவரையும் உள் நுழைய அனுமதிக்க வேண்டாம் எனவும்,பொலிஸார் குறித்த பகுதியில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். கண்டுபிடிக்கப்பட்ட குறித்த கிணறு 2 ½ மீற்றர் அளவுடையதாகவும், 15 சென்றிமீற்றர் விட்டத்தை கொண்டதாகவும் காணப்படுகின்றது. நிள அளவை திணைக்களத்திடம் அதற்கான மாதிரி வரை படைத்தை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
மீண்டும் குறித்த சர்ச்சைக்குரிய கிணறு தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.