
உக்ரைன் படையெடுப்பில் ரஷ்யாவுக்கு சீனா உதவி புரிந்தால் அந்த நாடு கடுமையான விளைவுகளுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யப் படையெடுப்பை ஆரம்பித்த பின் அது சீனாவிடம் இராணுவ உதவிகளை கேட்டதாக பெயர் குறிப்பிடாத அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கோரிக்கை பற்றி தமக்கு தெரியாது என்று வொசிங்டனில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் சீன அதிகாரிகள் நேற்று ரோமில் சந்திப்பதற்கு முன்னர், அமெரிக்கா, சீனாவுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்தப் பிரச்சினை ஆரம்பித்தது தொடக்கம் தனது நீண்ட கால நட்பு நாடான ரஷ்யாவுக்கு சீனா கருத்து அளவில் ஆதரவை வெளியிட்டு வருகின்றபோதும் இராணுவ அல்லது பொருளாதார உதவிகளை வழங்குவது பற்றி வெளிப்படையாக எதுவும் தெரியவில்லை.
எனினும் ரஷ்யா சீனாவிடம் ட்ரோன்கள் உட்பட இராணுவ உபகரணங்களை கேட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.