
ஈராக்கின் வடக்கு குர்திஷ் பிராந்திய தலைநகர் எர்பலில் நடத்தப்பட்ட பலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களுக்கு ஈரானின் புரட்சிக் காவல் படை பொறுப்பேற்றுள்ளது.
அந்த நாட்டில் இருக்கும் இஸ்ரேலிய ‘மூலோபாய நிலையம்’ இலக்கு வைக்கப்பட்டதாக ஈரான் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ‘இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு தாக்குதலுக்கும் கடுமையான, தீர்க்கமான மற்றும் அழிவு தரும் பதிலளிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
சிரியாவில் கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரு ஈரான் காவல்படை வீரர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது என்று எர்பில் ஆளுநர் ஒமேத் கொஷ்னொல் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஏவுகணை தாக்குதல்களால் புதிய துணைத்தூதரக கட்டிடத்தில் பொருட்சேதம் மாத்திரமே ஏற்பட்டதாகவும் பொதுமகன் ஒருவர் காயமடைந்ததாகவும் குர்திஷ் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனை ஆத்திரமூட்டும் தாக்குதல் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.