“இரக்கமற்ற அரக்கன்” இராஜபக்சேவின் கூட்டாளி சுமந்திரனை தமிழ்நாடு முதலமைச்சர் சந்திக்கக்கூடாது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வ.கெளதமன் வேண்டுகோள்.
2009 திட்டமிட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முன்பும் பின்பும் மனிதகுல எதிரி “இரக்கமற்ற அரக்கன்” இராஜபக்சேவோடு கைகோர்த்து தமிழினம் ஒரு பேரழிவைச் சந்திக்க காரணமாக இருந்த சுமந்திரன் அவர்கள் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னைக்கு வந்திருப்பதும், அவர் தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க முயலும் செய்தியும் அதிர்ச்சி அளிக்கிறது. உலகம் முழுக்க வாழ்கின்ற தமிழர்களின் வலி உணர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுமந்திரன் அவர்களை சந்திக்கக் கூடாது என்றும், முதல்வர் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் தலைவர்கள் எவரும் சுமந்திரனை சந்திக்க வேண்டாமென்றும் தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
முள்ளிவாய்க்கால் நந்திக் கடலை தமிழர்களின் இரத்தத்தால் செங்கடலாக மாற்றிய இராஜபக்சே கூட்டதின் கைக்கூலியாக செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை அரசை அனைத்துலக விசாரணையிலிருந்து காப்பாற்றியதும், ஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கையை காப்பாற்றி மூன்று முறைகள் கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்ததும் இந்த பச்சைத் துரோகி சுமந்திரன்தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். உலகம் முழுக்க ஓடி ஓடிச் சென்று விடுதலைப்புலிகள் மீதும் விசாரணை வேண்டும் என்றதோடு மட்டுமல்லாமல் இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் தான் தமிழர்களின் உரிமை இருக்க வேண்டும் என்று கூவுவதோடு, சர்வதேச விசாரணை ஒரு போதும் இலங்கைக்கு தேவையில்லை, உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்டே ஈழத் தமிழர்களுக்கான நீதியினை பெறவேண்டுமென்று பிறந்த மண்ணிற்கும், வளர்த்த தமிழினத்திற்கும் துரோகம் செய்து கொண்டிருக்கும் இவர்தான் இப்போது குள்ளநரி வேடத்தோடு தமிழ்நாட்டிற்குள் கால் பதித்திருக்கிறார். இதனை தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டின் தலைவர்களும் புரிந்துகொண்டு சுமந்திரன் அவர்களை முற்றிலுமாக புறந்தள்ள வேண்டும்.
முள்ளிவாய்க்காலுக்கு பின்பு 12 ஆண்டுகள் கடந்தும், இது போன்ற புல்லுருவிகளால்தான் தமிழீழத்திற்கான தீர்வு இதுவரை கிடைக்காமல் தள்ளிப்போய்க் கொண்டேயிருக்கிறது. உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழீழத்திற்கான திறவுகோல் தமிழ்நாட்டின் கையில்தான் இருக்கிறது என்பதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் உறுதியாக உள்வாங்கியிருக்க முடியும் என்று நம்புகிறேன். ஏனென்றால் எங்களைப் போன்றே முதல்வர் அவர்களும் தமிழீழத்திற்கான நீதிவேண்டி ஜெனிவாவின் ஐநாவிற்கு நேரடியாக சென்று வாதாடியிருக்கிறீர்கள். ஆகையினால் இதற்கு முந்திய செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழீழம் மட்டுமே தீர்வு, இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் ஏற்று, தமிழர்களை அழித்த இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதி என இந்திய ஒன்றிய அரசுக்கு தீர்மானம் இயற்றி அனுப்பியது போன்று, தாங்களும் உடனடியாக ஒரு சிறப்பு தீர்மானம் இயற்றி இந்திய ஒன்றிய அரசிற்கு அனுப்ப வேண்டுமென்று உலகத் தமிழர்களோடு சேர்ந்து தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
பேரன்போடு,
வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
12.03. 2022