
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி நேட்டோ கூட்டணியில் சேர்வதைத் தாம் இனி வற்புறுத்திக் கேட்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். ரஷ்யாவை அமைதிப்படுத்தும் வகையில் அவருடைய பேச்சு அமைந்திருந்தது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர விரும்பியதே ரஷ்யப் படையெடுப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டது.
ஆக்கிரமிப்பைத் ஆரம்பிப்பதற்கு முன்னர், உக்ரைனில் உள்ள இரண்டு ரஷ்ய ஆதரவு வட்டாரங்களை, சுதந்திரம் பெற்ற பகுதிகளாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்தார். அதிலும் உக்ரைன் சமரசமாகப் போக விரும்புவதாக செலென்ஸ்கி கூறினார்.
நேட்டோ அமைப்பு உக்ரைனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அந்த அமைப்பு சர்ச்சைக்குரிய காரியங்களில் ஈடுபடவும் ரஷ்யாவுடன் மோதவும் அஞ்சுகிறது. என்று ஏ.பி.சி நியுஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
“எங்களை இணைத்துக்கொள்ள நேட்டோ தயாராக இல்லை என்பதை புரிந்துகொண்ட பின், நேட்டோ படையில் இணைய வேண்டும் என்ற என் மனநிலை மாறிவிட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.
நேட்டோவில் சேர்வது பற்றிக் குறிப்பிட்டபோது, அங்கத்துவம் கேட்டு மன்றாடும் நாட்டின் ஜனாதிபதியாக இருக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்.
நேட்டோ படையில் சேராமல் இருப்பது, கிரைமியாவை ரஷ்யாவின் அங்கம் என அங்கீகரிப்பது, டொனெட்ஸ்க் மற்றும் லுௗஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திரமானவை என அங்கீகரிப்பது ஆகிய ரஷ்யாவின் 3 வலியுறுத்தல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த செலென்ஸ்கி, தான் இது குறித்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.