
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தியின் தலைமையில் விழிப்புணர்வு நடைபவனியொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது.
“நாடும் தேசமும் உலகமும் அவளே” எனும் இவ்வாண்டிற்கான தொனிப்பொருளிற்கு அமைய புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நடைபவனியானது, “பெண்களின் தலைமைத்துவத்தின் ஊடாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு நஞ்சற்ற உணவினை உற்பத்திசெய்வோம்” எனும் தொனிப்பொருளிற்கு அமைய புதுக்குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலய முன்றல் வரை இந் நடைபவனி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து இடம்பெற்ற பிரதான நிகழ்வானது, சூரியா பெண்கள் அமைப்பின் வரவேற்பு பாடலுடன் ஆரம்பமாகியதனைத் தொடர்ந்து, பிரதேச செயலாளரின் தலைமையுரை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து புதுக்குடியியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மாணவியின் “மகளிரைப் போற்றுவோம்” எனும் கவிதை இசைக்கப்பட்டதுடன், “இயற்கை விவசாய உரப்பாவனையை ஊக்குவிப்போம்” எனும் தொனிப்பொருளில் விசேட உரைகளும் இடம்பெற்றன.
சூரியா பெண்கள் அமைப்பின் விழிப்புணர்வு வீதி நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், இதன்போது அதிதிகளினால் பயன்தரும் பழ மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பெண்களின் சுதந்திரத்தின் வெளிப்பாடாக அதிதிகள் உள்ளிட்ட பங்குபற்றிய அனைத்து பெண்களினாலும் பலூன்கள் பறக்க விடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வுகளில் மண்முனைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.வீ.லோகினி, பிரதேச செயலக கணக்காளர் வீ.நாகேஸ்வரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பிரதேச செயலக உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும்,கிரான்குளம், கிரான்குளம் வடக்கு, கிரான்குளம் மத்தி, கிரான்குளம் தெற்கு, புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு வடக்கு, புதுக்குடியிருப்பு தெற்கு மற்றும் தாளங்குடா ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிற்கான மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.