வடமாகாணத்திற்கு தமிழ் மொழி தெரியாத சிங்கள இளைஞர், யுவதிகளை விவசாய அபிவிருத்தி அலுவலர்கள் என்ற போர்வையில் அனுப்பி வைப்பது தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படும் மற்றுமொரு இன அழிப்பு என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்ததாவது,
வட மாகாணத்தில் கடந்த கால போரினால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்களும் யுவதிகளும் வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரத்திற்கு வழியும் இன்றி தவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
இத்தகைய நிலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கோரிக்கைகளையும் புறம் தள்ளி இந்த நியமனத்தை அரசாங்கம் திட்டமிட்ட முறையில் மேற்கொண்டுள்ளமை சிங்கள அரசுகளின் சுய உருவத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.
வட மாகாணத்தில் அவசர அவசரமாக விவசாய அபிவிருத்தி அலுவலர்களுக்கான நியமனம் வட மாகாண சபை முதல்வரின் ஆட்சேபனை மற்றும் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் புறம் தள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
புதிய பாராளுமன்றம் எதிர்வரும் முதலாம் திகதி கூடவுள்ள நிலையில் விவசாய அமைச்சு தான்தோன்றித்தனமாக வட மாகாணத்திற்கு சிங்கள அலுவலர்களை அவசர அவசரமாக நியமனம் செய்துள்ளது.
நல்லாட்சியை எதிர்பார்த்து கடந்த ஜனாதிபதித்தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து பின்னர் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு நல்லாட்சிக்கான அரசின் நியாயமான தமிழ் மக்களின் தீர்வைப் பெற காத்திருக்கும் நிலையில் அரசாங்கம் தமிழ் மக்களின் இன கலாசார அடையாளங்களை அழிக்கும் வகையில் சிங்கள விவசாய அபிவிருத்தி அலுவலர்களை வடக்கிற்கு நியமித்துள்ளது. இத்தகைய செயலால் அரசாங்கம் தனது சுய உருவத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.