கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்படாத பகுதிகளில் துரிதகதியில் அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வுகள் கடந்த 2009ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு 80 வீதமான பகுதிகள் மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முகமாலைப் பகுதியில் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளும் பரவிப்பாஞ்சான், இரணைதீவு ஆகிய பகுதிகள் இதுவரை மீள்குடியமர்விற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. இதனால் இப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக நலன்புரி நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் வாடகை வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக கிளிநொச்சி நகரின் பரவிப்பாஞ்சான் பகுதி மக்கள் கிளிநொச்சி நகரின் பல பகுதிகளிலும் அதிகூடிய வாடகை மற்றும் முற்பணம் ஆகியவற்றை செலுத்தி போதிய வசதிகளற்ற வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இதேபோன்று 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியேற்றப்பட்ட இரணைதீவு கடற்தொழில் கிராம மக்கள் இடம்பெயர்ந்து இன்று 25 வருடங்களுக்கு மேலாக சொந்த இடங்களுக்குச் சென்று வர முடியாததுடன் அங்கு தொழில் செய்ய முடியாது வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.
இதேவேளை கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிலுள்ள முகமாலைப்பகுதியில் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளில் வெடிபொருட்கள் அகற்றும் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக இதுவரை மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்றுவரை தமது சொந்த நிலத்தில் குடியமரமுடியாது பெரும் சிரமங்களுடன் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.