‘லீசிங்’ பணம் கட்டுவதற்காகவே யாழ். மூதாட்டி கொலை: கொலையாளி சாட்சியம்!

0
76

,”மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன்.” என யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண்ணை கொலை செய்த சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 28 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்கிழமை (22) அன்று யாழ்ப்பாணம், சோமசுந்தரம் அவனியுவில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்த 72 வயதான மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி என்ற பெண்ணே இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவ தினத்தன்று கொலை நடந்த வீட்டுக்கு அருகில் உள்ள CCTV காணொளி பதிவில் கொலையாளி துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். அதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டவர் நேற்று வியாழக்கிழமை  காலை கைது செய்யப்பட்டார்.

புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பத்தலைவரே கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் போது ,

“குறித்த பெண்ணின் வீட்டில் முதல் நாள் பூக்கன்றுகளை வெட்டி வேலை செய்தேன். மறுநாள் மிகுதி வேலையை செய்யுமாறு கேட்டிருந்தார்.

மறுநாள் சென்ற போது பட்டமரத்தை வெட்டுமாறு, அயலில் உள்ள வீட்டில் கோடரி, மண்வெட்டியை குறித்த பெண் வாங்கித் தந்தார்.

எனது மனைவிக்கு மோட்டார் சைக்கிள் லீசிங்கில் வாங்கிக் கொடுத்தேன். அதற்கான பணத்தை உறவினரிடம் வாங்கிக் கட்டியிருந்தேன். அவர் தன்னிடம் வாங்கிய 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மீளத் தருமாறு அடிக்கடி கேட்டார்.

இந்நிலையிலையே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த குறித்த பெண்ணின் பின்னால் சென்று தலையில் தாக்கினேன். அவர் சுயநினைவிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது தங்க மாலையை அபகரித்துக் கொண்டு சென்றுவிட்டேன்” என்று தெரிவித்தார்.

அத்துடன் தனது வீட்டுக்கு காவல்துறையை அழைத்துச் சென்ற சந்தேகநபர் பை ஒன்றிலிருந்த குறித்த தங்க மாலையை எடுத்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

(நன்றி:கொழும்பு ஊடகம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here