செயலிழந்த செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவு அதிகரித்து வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி நடந்த செர்னோபில் அணுமின் நிலைய விபத்து, உலக வரலாற்றில் மிக மோசமான அணு உலை விபத்தாக பதிவானது.
அன்றைய தினம் செர்னோபில் அணுமின் நிலையத்தின் 4 ஆவது அணுஉலை வெடித்துச் சிதறியது. இதில் சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் அணுக்கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டனர்.
அப்போதைய சோவியத் ஒன்றியம், இந்த சம்பவத்திற்கு பிறகு செர்னோபில் அணுமின் நிலையத்தைச் சுற்றி கதிர்வீச்சு வெளியேறாத வகையில் கான்க்ரீட் தடுப்புகளை அமைத்தது. அதனை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி செர்னோபில் அணுமின் நிலையம் நிரந்தமாக மூடப்பட்டது.
தற்போது உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 2-வாது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய படைகள் செர்னோபில் பகுதியில் உள்ள அணு ஆலையை மீண்டும் கைப்பற்ற முயல்வதாகவும், இது ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் எதிரான போர்ப் பிரகடனம் என்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
செர்னோபில் அணுமின் நிலையம் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலையில் அமைந்துள்ளது. மேலும் செர்னோபில் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சண்டை நடைபெற்று வருவதை சர்வதேச செய்தி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.
இந்நிலையில் செயலிழந்த செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவு அதிகரித்து வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செர்னோபில் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருந்து காமா கதிர்வீச்சு அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும் கதிர்வீச்சு அதிகரித்ததற்கான காரணம் வெளியிடப்படவில்லை.
ரஷ்ய இராணுவம் செர்னோபில் பகுதியில் தரையிறங்கிதாலும், இராணுவ தளவாடங்களை கொண்டு சென்றதால் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாகவும் அங்குள்ள காற்றில் கதிர்வீச்சு அளவு அதிகரித்திருக்கக் கூடும் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி இகோர் கோனஷென்கோவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தினத்தந்தி