வடக்கு உட்பட இலங்கையில் டீசல் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், பெரும் எண்ணிக்கையிலான பொதுப் போக்குவரத்து பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ‘டீசல் இல்லை’ என்ற பதாகை வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி மருதனார்மடம் சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இவ்வாறான பதாகை வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகமான மக்கள் எரிபொருள் கொள்வனவுக்காக காத்திருப்பதாகவும் அறிய வருகிறது.
இதேவேளை,
டீசல் இல்லாத காரணத்தினால் இன்று காலை இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று களுத்துறை நகரின் மையப்பகுதியில் நிறுத்தப்பட்டது.
இதனால் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி குறித்த பேருந்தில் பயணித்த பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதாகத் தெரியவருகிறது.
பேருந்து நிற்கும் நேரத்தில், அங்கு 80 பேர் இருந்ததால், அவர்களை வேறு பேருந்துகளில் திருப்பி விட ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர், களுத்துறை டிப்போவில் இருந்து டீசல் கொண்டுவரப்பட்டு பேருந்து இயக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.