வட தமிழீழம்
மன்னார் சதொச மனித புதைகுழியை மீண்டும் அகழ்வதற்கு வவுனியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மன்னார் நீதிமன்றக் கட்டளையில் மன்னார் சதொச மனித புதைகுழி அகழப்பட்டு பல மனித எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வந்த சூழ்நிலையில் காணாமல்போனோர் மற்றும் சட்டத்தரணிகள் வழக்கில் ஆஜராக முடியாது என மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததையடுத்து மூன்று பாதிக்கப்பட்ட நபர்கள் வவுனியா மேல் நீதிமன்றில் மீளாய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மீளாய்வு மனு இன்று விளக்கத்திற்கு வந்தது. விசேட அரச சட்டவாதி, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ரத்னவேல் தலைமையிலான சட்டத்தரணி குழாம் (OMB), காணாமல்போனோர் தரப்பிற்கான சட்டத்தரணி ஆகியோர் வாதப்பிரதி வாதங்களில் இன்று ஈடுபட்டனர்.
புதைகுழி அகழ்வில் ஈடுபட்ட வைத்திய கலாநிதி ராஜபக்ச மன்றில் ஆஜராகி இருந்தார். விளக்கம் முடிவடைந்ததும் உடனடியாகவே நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பை அறிவித்தார்.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்துச் செய்யப்படுகிறது எனவும், புதைகுழி அகழ்வுப் பணியை உடன் ஆரம்பிக்குமாறும் மன்னார் நீதிபதிக்கு இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்தார்.
காணாமல்போனோரின் உறவினர்கள் மற்றும் அவர்களது சட்டத்தரணிகள் புதைகுழி விசாரணையில் பங்கு கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஒவ்வொரு புதைகுழி அகழ்வு நாட்களிலும் 10 பேர் நேரடியாக கலந்து கொள்வதற்கும் மற்றையவர்கள் 30 மீற்றர் தூரத்தில் இருந்து அகழ்வு பணியை பார்வையிடவும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு மணித்தியாலத்தில் 10 நிமிடம் நேரடியாக புதைகுழி இடத்தில் சென்று செய்தி சேகரிக்க நீதிமன்று அனுமதியளித்துள்ளது.
மிக விரைவாக அகழ்வுப் பணியை ஆரம்பித்து முடிவிற்கு கொண்டு வருமாறு மன்னார் நீதிமன்றத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மன்னார் நீதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் அரச சட்டவாதி, சட்டத்தரணிகள், பொலிஸார், சட்ட வைத்திய அதிகாரிகள், காணாமல்போனோரின் உறவுகள் இருக்க வேண்டும் எனவும், அனைவரும் ஒன்று சேர்ந்து விசாரணையை முடிவிற்கு கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை செய்ய வேண்டும் என அனைவருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக குழியாக்கப்பட்ட மனிதப்புதைகுழி அகழ்வு விரைவாக நடத்தப்படும் முகமாக ஒவ்வொரு இரண்டு மாதமும் முன்னேற்றகரமான அறிக்கையை வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்ய வேண்டும் என மன்னார் நீதிபதிக்கு, நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், இரு மாதங்களுக்கு ஒருமுறை வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படும் எனவும் நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.
குறிக்கப்பட்ட வழக்கு மன்னார் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படாது வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்தது தவறு என ஆட்சேபனை முன்வைக்கப்பட்ட போது 13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் உள்ள எந்த நீதிமன்றமும் மன்னார் நீதிமன்றத் தீர்ப்பை கேள்விக்கு உட்படுத்த விசாரணை செய்யலாம் என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்து ஆட்சேபனையை நிராகரித்தார்.
செம்மணி மனித புதைகுழி வழக்கை சுட்டிக்காட்டி காணாமல்போவர்களின் உறவினர்களது சட்டத்தரணிகள் ஆஜராவதற்கு இலங்கை அரசியலமைப்புச் சட்டம், குற்றவியல் சட்டக்கோவையை சுட்டிக்காட்டி சட்ட ரீதியாகவே அனுமதி வழப்படும் என தெரிவித்த நீதிபதி மன்னார் நீதவான் நீதிமன்ற தீர்மானத்தை இரத்து செய்து தீர்ப்பளித்தார்.
மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் கட்டளையின் கீழும், வவுனியா மேல் நீதிமன்ற மேற்பார்வையிலும், மன்னார் சதொச புதைகுழி வழக்கு நடைபெறும் என நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் அறிவித்தார்.