நைஜீரிய இராணுவம் கொள்ளைக்காரர்களை இலக்கு வைத்து தெற்கு நைகரில் வழி தவறி நடத்திய வான் தாக்குதலில் ஏழு சிறுவர்கள் கொல்லப்பட்டு மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
“எல்லையில் நைஜீரியர்களின் தாக்குதல்களில் ஒரு தவறு இடம்பெற்றுள்ளது. இதனால் எமது நிலப்பகுதியின் நசன்டே கிராமம் பாதிக்கப்பட்டுள்ளது” என்று நைஜீரியாவுக்கு நெருக்கமான மராடி பிராந்திய ஆளுநர் சைபு அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக நைஜீரிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த நேரம் அந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோதே அவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் இடம்பெறும் கொலை மற்றும் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட கொள்ளைக்காரர்கள் என அழைக்கப்படும் ஆயுதக் கும்பல்களுக்கு எதிராக நைகர் மற்றும் நைஜீரியா இரு நாடுகளும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.