நேரு பேரனின் சாதனையால் இந்தியாவுக்கு வந்த சோதனை!

0
76
போர்க்குற்றத்துக்கு பொறுப்புக்கூறல், சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி என்பவைகளை

அடியோடு மறுக்கும் சிங்கள அரசின் பிரதிநிதி ஜி.எல்.பீரிஸ், ஏற்கனவே இடம்பெற்ற பிரச்சனைகளையிட்டு நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை என்று யாழ்ப்பாணத்தில் நின்றவாறு தமிழருக்கு வழங்கிய ஆலோசனை ஜெனிவாவுக்கும் இந்தியாவுக்குமானதும் கூட. 
தமிழர் பேச்சுவழக்கில், முக்கியமாக – ஈழத்தமிழரின் சொல்லாடலில் தடல்புடல் என்றொரு வார்த்தையுண்டு. சிறப்பான, விசேடமான, முக்கியமான நிகழ்வுக் காலங்களில் தடல்புடலாக என்று குறிப்பிடுவது வழக்கம். 
அதீத அக்கறையுடன், தீவிரமான செயற்பாட்டுடன், மிதமிஞ்சிய வேகத்துடன் இடம்பெறும் சம்பவங்களையே தடல்புடலாக என்று கூறுவர். 
இலங்கையின் அரசியலைப் பொறுத்தளவில் இப்போது தடல்புடலாக பல விடயங்கள் இடம்பெறுகின்றன. வருடத்துக்கு மூன்று முறை வந்துபோகும் ஜெனிவாக் காலம் இது. தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பாசையில் சொல்வதானால், அடி வேண்டி வேண்டிக் களைத்துப்போன தமிழர் தரப்பும், அடித்து அடித்துக் களைத்துள்ள சிங்களத் தரப்பும் ஜெனிவாவை மையப்படுத்தி போராடிக் கொண்டிருக்கின்றன. 
ஜெனிவாவை நோக்கி தமிழர் தரப்பிலிருந்து கடிதங்கள் பறக்கின்றன. இதனை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆரம்பித்து வைத்துள்ளார். முன்னரைப்போல அவரது கூட்டுக்குள்ளிருந்தே தனித்தனிக் கடிதங்கள் நிச்சயம் தொடரும். 
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 49வது கூட்டத்தொடர் இந்த மாதத்தின் இறுதி நாளான 28ம் திகதி ஆரம்பமாகி, ஏப்ரல் முதலாம் திகதிவரை இடம்பெறும். இம்முறை இலங்கை தொடர்பான எழுத்து வடிவிலான அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்சிலற் அம்மையார் சமர்ப்பிப்பார். 
46:1 இலக்கத் தீர்மான அடிப்படையில் இது தொடர்பான மூன்று அமர்வுகளும் முக்கியமானவையாக இரு தரப்பாலும் பார்க்கப்படுகிறது. 46:1 தீர்மானத்தை இலங்கை அரசு எவ்வாறு கையாளுகிறது, அதனை எவ்வாறு மதிக்கிறது, நிறைவேற்றுவதில் எவ்வளவு தூரம் நகர்ந்துள்ளது என்பதை 48ஐத் தொடர்ந்து வரும் அமர்வுகளில் கட்டம் கட்டமாக மனித உரிமை ஆணையாளர் தெரிவிக்க வேண்டும். 
இதன் அடிப்படையில், 48வது அமர்வில் வாய்மூல அறிக்கையை வெளியிட்டார். இந்த மாதம் ஆரம்பமாகும் அமர்வில் எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பிப்பார். அடுத்த கட்டமாக தீர்மானம் மீதான முழுமையான கலந்துரையாடலும் விவாதமும் இடம்பெறும். அதன் பின்னரே, 46:1 தீர்மானத்தின் எதிர்காலம் என்னவென்பது தெரியவரும். 
இலங்கை அரசைப் பொறுத்தளவில் எல்லாமே ஒன்றுதான். அவ்வப்போது சாதுரியமான செயற்பாடுகள் மூலம் சர்வதேசத்தை ஏமாற்றுவதே இதன் வழமை. அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்துக்கு இணைஅனுசரணை வழங்கிவிட்டு, பின்னர் அதிலிருந்து வெளியேறியபோதே அதன் சுயரூபம்  கல்வெட்டாகத் தெரியவந்தது. இன்றும் அதே நிலைதான் தொடர்கிறது. 
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென்று தமிழ் அரசியல் தரப்புகளை சந்தித்தார். இதற்கு முன்னர் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர்கள் இலங்கை சென்று பெற்றுக் கொண்ட தரவுகளின் தொடர்ச்சியாக இதனைப் பார்க்கலாம். 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், கஜேந்திரகுமாரின் மக்கள் முன்னணி, யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோருடன் இவர் நடத்திய சந்திப்பு ஊடகங்களில் வெளியானது. கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வீ.கே.சிவஞானம்  ஆகியோர் சந்தித்தனர். கூட்டமைப்பின் பங்காளிகளில் ஒருவரான ரெலோவையும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனையும் கச்சிதமாக  இவர்கள் தவிர்த்துக் கொண்டனர். 
ஹனா சிங்கர் தாம் சந்தித்த அனைவரது கருத்துகளையும் உள்வாங்கிய பின்னர் ஐந்து ஆங்கிலச் சொற்களில் ஒரு விடயத்தை அவர்களுக்குத் தெரிவித்தார். ஜெனிவா அமர்வில் Some concrete action may follow (சில தீர்க்கமான நடவடிக்கைகள் வரக்கூடும்) என்பதே அவர் தெரிவித்தது. ராஜரீகப் பணியிலுள்ள ஒருவரால் அவ்வளவுதான் குறிப்பிட முடியும். அர்த்தம் புரிந்து கொள்ளக்கூடியது. 
இந்த விடயம் பகிரங்கமானதையடுத்து இலங்கை அரசு உசாரடைந்தது. 49வது அமர்வு தங்களுக்கு நெருக்கடியைக் கூட்டுமென்பது முற்கூட்டியே தெரிந்திருந்தாலும், சம்பந்தப்பட்ட ராஜதந்திரி ஒருவர் ராஜரீக மொழியில் தெரிவித்த கருத்து, ஜெனிவாவை உச்ச அளவில் தாங்கள் இம்முறை எதிர்கொள்ள வேண்டுமென்ற அச்ச உணர்வை கோதபாய குழுமத்துக்கு ஏற்படுத்தியது. 
மறுதரப்பில், தாம் மறைமுகமாகத் தெரிவித்த கருத்தை தமிழர் தரப்பிலுள்ள ஒரு சிலர் அவசரப்பட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்ததையிட்டு ஹனா சிங்கர் மனம் கசந்ததையும் ஊடகங்கள் சுட்டியுள்ளன. 
ஒருபுறத்தில் நாடளாவிய ரீதியில் தங்கள் அரசியல் செல்வாக்கு குறைந்து வருவதையும், வாக்கு வங்கி வற்றிச் செல்வதையும் அவதானித்துள்ள ராஜபக்சக்களுக்கு அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி நேர்ந்துள்ள நெருக்கடிக்குள், ஜெனிவா சவாலை முகங்கொடுக்கும் அவசியமும் சேர்ந்து இரட்டிப்புப் பளுவாக்கியது. அதனால் ஜெனிவாவை கையாளும் பணி வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நீதியமைச்சர் அலி சப்றி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் ஓர் அங்கமாக இரு அமைச்சர்களும் அண்மையில் வடக்கே சென்றனர். 
எதிர்பார்த்ததுபோல இலகுவானதாக இவர்களின் பயணம் அமையவில்லை. சென்ற இடமெங்கும் கேள்விக் கணைகள். அரசின் மீதான தங்கள் நம்பிக்கையீனத்தை ஒவ்வொருவரும் வெளிப்படையாகத் தெரிவித்தனர். ஜெனிவாவுக்கு வெள்ளையடிக்கவே வந்ததாகவும் தெரிவிக்கத் தவறவில்லை. புதிய அரசியலமைப்பு, மாகாண சபை முறைமை நீக்கம் போன்றவைகளை நேரடியாகவே வினவினர். 
சமகாலத்தில் அரசின் பங்காளிகளில் ஒருவரான சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஓர் உண்மையை கொழும்பில் போட்டுடைத்தார். வரப்போவதாகக் கூறப்படும் புதிய அரசியலமைப்பின் மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு கிடையாது என்பதுவே இவர் வெளியிட்ட துணிச்சலான அறிவிப்பு. முன்னைய மகிந்த ஆட்சிக் காலத்தில் செயற்பட்ட சர்வ கட்சிகளின் கூட்ட தவிசாளராகக் கடமையாற்றிய திஸ்ஸ விதாரண, அனைத்துத் தரப்பும் ஏற்றுக் கொண்ட ஆலோசனைகளை அறிக்கையாக சமர்ப்பித்ததும், அது அப்படியே குளிர்சாதனப் பெட்டிக்குள் புதைக்கப்பட்டதும் தெரிந்த வரலாறு. 
திஸ்ஸ விதாரணவின் அறிவிப்பு இரண்டு அமைச்சர்களையும் நெருக்குவாரத்துக்குள் தள்ளியது. முக்கியமாக நிகழ்கால பேசுபொருளாகவுள்ள மாகாண சபை பற்றி ஊடகங்கள் கேள்வி எழுப்பின. 
புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகள் நீக்கப்படுமென தாம் நினைக்கவில்லையென்றும், அது பற்றி எதனையும் ஜனாதிபதி தமக்குத் தெரிவிக்கவில்லையென்றும் நழுவல் பாணியில் அமைச்சர் பீரிஸ் பதிலளித்தார். ஆனால், அமைச்சர் அலி சப்றியின் பதில் வேறுவிதமாக அமைந்தது. அதாவது, மாகாண சபை முறைமையில் சில மாற்றங்கள் வருமென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்மையை கக்கி விட்டார். 
அரசுக்கு நெருக்கமான ஊடக வட்டாரங்களின் தகவலின்படி புதிய அரசியலமைப்பு வருமானால் அதில் ஒரு வரி – ஒரேயொரு வரி முக்கியமானதாக இருக்கும். காணி அதிகாரமும், காவற்துறை அதிகாரமும் மத்திய அரசின் கீழ் அமையும் என்ற ஒற்றை வரி மாகாண சபைக்கு எந்த அதிகாரமும் இருக்காது என்பதை நிலைநிறுத்தும். இவ்விடயத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை இந்தியா வெளியிலிருந்து பார்க்க முடியுமேயன்றி அதில் தலையிட முடியாது. 1987ல் ராஜிவ் காந்தியும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனமும் செய்து கொண்ட ஒப்பந்தமும், பதின்மூன்றாவது திருத்தமும்கூட இந்திய தலையீட்டுக்கு இடம்கொடுக்காது. 
1948க்குப் பின்னரான முதலாவது அரசியலமைப்பு, 1972ல் சிறிமாவோ பண்டாரநாயக்கா அமுலாக்கிய இரண்டாவது அரசியலமைப்பு, 1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பிரகடனப்படுத்திய மூன்றாவது அரசியலமைப்பு ஆகியவைகளை விஞ்சியதாக, எண்ணுக்கணக்கில் சிறுபான்மையினராகக் கொள்ளப்படும் தமிழரின் அற்ப சொற்ப உரிமைகளையும் கோதாவின் உத்தேச அரசியலமைப்பு இல்லாமற் செய்யப் போகிறது. 
போர்க்குற்றத்துக்கு பொறுப்புக்கூறல், சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி என்பவைகளை அடியோடு மறுக்கும் சிங்கள அரசின் பிரதிநிதி ஜி.எல்.பீரிஸ், ஏற்கனவே இடம்பெற்ற பிரச்சனைகளையிட்டு நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை என்று யாழ்ப்பாணத்தில் நின்றவாறு தமிழருக்கு வழங்கிய ஆலோசனை வெறுமனே தமிழருக்கு வழங்கப்பட்டதல்ல. இது ஜெனிவாவுக்கானது. இதுதான் இவர்கள் இந்தியாவுக்கும் கூறுவது. 
சில நாட்களுக்கு முன்னர் இந்தியா சென்றிருந்த பீரிஸ் அங்கு தமது சகபாடியான ஜெய்சங்கரையும், வெளியுறவுச் செயலரையும் சந்தித்தார். பசில் ராஜபக்ச கடந்த மாதம் புதுடில்லி சென்றபோது அவரைச் சந்திக்காத பிரதமர் மோடி இவரையும் சந்திக்கவில்லை. ஆனால், மோடி அடுத்த மாதம் கொழும்புக்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார். 
இந்திய விஜயத்தின் பின்னர் ஜி.எல்.பீரிஸ் பகிரங்கமாகத் தெரிவித்துவரும் இரு விடயங்கள் – இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி இந்தியாவில் எவரும் என்னுடன் பேசவில்லை, இலங்கை அரசியல் பரவலாக்கலில் இந்தியாவுக்கு வகிபாகம் இல்லை – என்பவை. 
ஆனால், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் அமைச்சு வெளியிட்ட செய்தி அறிக்கையில் – தமிழருக்கான நீதியை உறுதி செய்வது இலங்கையின் நலனுக்கு நல்லது, இதற்கு அதிகாரப் பரவலாக்கல் முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழரையும் ஜெனிவாவையும் சர்வதேசத்தையும் கையாளத் தெரிந்த இந்தியா, எவ்வாறு பீரிஸ் போன்றவர்களைக் கொண்ட இலங்கையைக் கையாளப் போகிறது? நேருவின் பேரனின் சாதனையால் இந்தியாவுக்கு வந்துள்ளது சோதனை!

 -பனங்காட்டான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here