இலங்கையில் அமையும் புதிய அரசால் தமிழர் பிரச்சினைகளுக்கு எந்தவித தீர்வும் கிடைக்காது என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் நேற்று சனிக்கிழமை அவர் கூறியதாவது:
இலங்கையில் ரணில் விக்ரமசிங்க, சிறீசேன ஆகியோர் இணைந்து கூட்டாக அரசு அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இருவரது முந்தைய நடவடிக்கைகளை வைத்து பார்த்தாலே ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு எந்தவித தீர்வும் கிடைக்காது என்பது தெளிவாகும்.
தேர்தலில் தமிழர்களுக்குக் கிடைத்த ஒரே ஆறுதலான விஷயமாக, தமிழர் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அதிகளவில் வெற்றி பெற்றிருப்பது மட்டுமே.
மொத்தம் 16 இடங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிடித்துள்ளது. ஒரு சில இடங்களில் சிங்கள கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். அதுவும், போருக்குப் பின்னர் நடந்த சிங்கள குடியேற்றத்தால் கிடைத்த வெற்றியாகும்.
இலங்கையில் அமையும் புதிய அரசால் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பது ஏற்புடையதல்ல.
ராஜபக்ச அமைச்சரவையில் 2வது அமைச்சராக இருந்தவர் சிறீசேன. இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பான விசாரணையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என உலகரங்கில் பகிரங்கமாக எதிர்த்தவர் சிறீசேன.
இதேபோல, விடுதலைப் புலிகளுடன் ரணில் விக்ரமசிங்க கட்சி மேற்கொண்ட ஒப்பந்தத்தை அந்தக் கட்சியினரே நாடாளுமன்றத்தில் கிழித்து எறிந்த சம்பவத்தையும் மறக்கக் கூடாது.
இந்த இருவரும் சேர்ந்து அமைக்கும் ஆட்சியில் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்பது ஏற்புடையதல்ல.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ள வெற்றியை பொது வாக்கெடுப்பாகக் கருதி இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஐ.நா. சபை முன்வர வேண்டும்.
முன்னதாக, ஐ.நா. மனித உரிமை ஆணையம் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றார் அவர்.