சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை, பகிரங்கமாக வெளியிடப்படுவதற்கு 48 மணிநேரம் முன்னதாகவே, சிறிலங்கா அரசாங்கத்துக்கு கையளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் மற்றும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், சர்ச்சைக்குரிய ஐ.நா விசாரணை அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கை, விடுதலைப் புலிகள் மற்றும் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளை கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படுவதற்கு 48 மணித்தியாலங்கள் முன்னதாக, சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்படும். அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் அது வெளியில் கசிவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த வார இறுதியில், அல்லது இந்த வாரத்தின் பிற்பகுதியில் சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்படவிருந்தது.
இந்த அறிக்கை வரும் செப்ரெபம்பர் 14ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக, ஐ.நா இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
இந்த அறிக்கை போருடன் தொடர்புபட்டிருந்த சாட்சிகள் மற்றும் ஏனைய தரப்புகளின் சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில், தயாரிக்கப்பட்டுள்ளது.
போரின் போது மனித உரிமைகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வெளிப்படைத்தன்மை குறித்த கரிசனைகள் இருந்தாலும், சாட்சியம் அளித்தவர்கள் பற்றிய அடையாளர்கள் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்படும்.
இந்த அறிக்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் வரும் செப்ரெம்பர் 30ஆம் நாள் கலந்துரையாடப்படவுள்ளது.