பிரேசிலில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 100 பேர் வரை பலி!

0
221

பிரேசிலின் பெட்ரோபொலிஸ் நகரில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

ரியோ டி ஜெனிரோவின் வடக்கில் உள்ள மலைப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்த நகரில் பெய்த கடும் மழையை அடுத்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மலைப்பிரதேசத்தில் இருக்கும் வீடுகள் அழிந்திருப்பதோடு வெள்ளத்தால் வீதி நெடுகிலும் கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. சேற்று மண்ணை தோண்டி உயிர் தப்பியோரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

இந்த அனர்த்தங்களில் 94 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் பிரேசிலின் தேசிய சிவில் பாதுகாப்பு பிரிவு ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது. பாரிய சேதங்கள் ஏற்பட்டிருப்பது மற்றும் வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. ‘நிலைமை போர் சூழல் ஒன்றைப் போல் காணப்படுகிறது. கார்கள் கம்பங்களில் தொங்குகின்றன, கார்கள் தலைகுப்புற காணப்படுகின்றன. அதிக சேறுகள் மற்றும் நீர் தொடர்ந்து தேங்கியுள்ளன’ என்று ரியோ டி ஜெனிரோ ஆளுநர் கிளவுடியோ காஸ்ட்ரோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

35 பேர் காணாமல்போயிருப்பதாக குறிப்பிட்ட அவர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இடைவிடாது இடம்பெறுவதாக தெரிவித்தார்.

ரியோ டி ஜெனிரோவுக்கு மேலாக உள்ள பெட்ரோபொலிஸ் நகர் சுற்றுலாத் தலம் ஒன்றாக உள்ளது. 19ஆம் நூற்றாண்டில் மன்னர்களின் கோடைகால விடுமுறைத் தலமாகவும் இது இருந்து வந்தது.

இங்கு மூன்று மணி நேரத்திற்கு ஒரு மாதத்திற்கான மழை கொட்டித் தீர்ந்ததை அடுத்து பயங்கர வெள்ளம் ஏற்பட்டு வீடுகள் மற்றும் கடைகளை மூழ்கடித்தது. இங்கு மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியில் 80 வீடுகள் வரை நிலச்சரிவில் சிக்கியுள்ளன.

‘அதிக வீரியத்துடன் நீர் வேகமாக வந்தது. ஏற்கனவே பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நான் 100 வீத இழப்பை சந்தித்துள்ளேன்’ என்று கடை உரிமையாளர் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

சுமார் 300 பேர் பாடசாலைகள் மற்றும் தற்காலிக முகாம்களில் அடைக்கலம் பெற்றுள்ளனர். உணவு, உடை, முகக்கவசம் மற்றும் படுக்கை ஆகிய உதவிகளை தொண்டு நிறுவனங்கள் கோரியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here