யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி, யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக் கழக நுழைவாயிலை மூடி மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தால் பல்கலைக் கழகச் செயற்பாடுகள் நேற்றுத் தடைப்பட்டன. பல்கலைக்கழக ஊழியர்கள், விரிவுரையாளர்கள் உள்நுழைய முடியாது வீதிகளில் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சு நடத்திய துணைவேந்தர் எஸ்.சிறிசற்குணராஜா, பரீட்சைகள் நடைபெறுவதால் பல்கலைகழக நுழைவாயிலைத் திறக்க வேண்டும் என்றும், இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்குச் சந்தர்ப்பம் வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும் எழுத்தில் முன்வைத்த கோரிக்கை 4 மாதங்களாக நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்ததால் பல்கலைக்கழகச் செயற்பாடுகள் தடைப்பட்டன. மாணவர்கள் போராட்டத்தை அடுத்து அந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நேற்று மாலை சந்தித்த துணைவேந்தர், மாணவர் ஒன்றியம் அமைப்பதற்கான உறுதிமொழியை வழங்கினார். அதையடுத்து மாணவர்கள் போராட்டத்தைச் கைவிட்டனர்.