
பொண்டி முதல்வர் திரு. stephan HERVE அவர்கள் கடந்தகாலம் முதல் அங்கு வாழும் தமிழ் மக்களுடனும், பிராங்கோ தமிழ்ச்சங்கத்துடனும் நல்லதோர் சகோதரத்துவத்தை பேணிவந்தவர், தான் முதல்வராக பதவி வகித்தகாலத்தில் தமிழ்மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியவர் தனது மாநகரத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து தமிழ் மக்களுக்கு சிங்களதேசத்தால் இழைக்கப்பட்டது தமிழினப்படுகொலை என்பதையும், சிறீலங்காவின் ஆட்சிப்பீடத்தில் உள்ள கொலைக்குற்றவாளிகளை சர்வதேசக்கூண்டில் ஏற்ற வேண்டும், தமிழீழ மக்களின் தேசியம் அங்கீகரிக்கப்பட்டு தனித்தமிழீழம் அமைவதே தீர்வாகும் என்று தீர்மானத்தை சென்றவருடம் நிறைவேற்றியிருந்தனர். மே18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல், மற்றும் தேசிய மாவீரர்நாள், இப்பகுதியில் நடைபெற்ற தேசத்தின்குரல் நினைவேந்தல் நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தவர். தமிழீழ மக்களின் மனங்களில் அரசியலுக்கு அப்பால் நாங்கள் உங்களோடு இருக்கின்றோம் என்ற நம்பிக்கையைத்தந்த பல அரசியல் வாதிகளில் இவரும் ஒருவராக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பொண்டிப் பிரதேசமாகிய இங்குவாழும் அதிகம் தமிழர்களால் ஏனைய மாநகரங்களில் வைக்கப்பட்ட தமிழர்களின் நினைவுச்சின்னங்கள் போலவென்றை நிறுவுவதற்கும் கட்சிகள் வேறுபாடுகள் இன்றி அனைத்து கட்சியிடமும் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் மூலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவர்களும் தாம் ஆட்சிக்கு வந்தால் அதனை நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதிகள் தந்திருந்தனர். பிரான்சு நாட்டைப்பொறுத்தவரை சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் ( விடுதலை) என்ற உன்னத தத்துவத்தை இன்றும் பேணிவருகின்றனர்; அந்தவகையில் தமிழீழ மக்களின் உன்னத தேசவிடுதலை உணர்வை கட்சி அரசியல் பேதத்திற்கு அப்பால் சென்று பார்க்கின்றவர்களாகவே அனைத்துக் கட்சியினரும் இருக்கின்ற போதும் ஆண்டுதோறும் பல்கிப்பெருகிவரும் தமிழீழமக்களதும், இளைவர்களின் வாக்குகள் 80 ஆயிரத்தை தொட்டுள்ளதாகவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. வாக்குப்பேரம் பேசும் சக்தியாக பெருகி வரும் நிலையில் இங்கு அரசியல் விஞ்ஞானம், சட்டத்துறையில் கல்வி கற்று வரும் எமது நாளைய சந்ததிகள் இத்தேர்தல்களில் பங்கொண்டு பலம்சேர்க்க வேண்டும் என்பதே பலரின் மிகப்பெரிய கனவாக இருக்கின்றது. “ இன்று எமது இனம் அனுபவித்த மிகப்பெரிய வலிகளே நாளை எங்களின் மிகப்பெரிய பலமாகப்போகின்றது ’’ அதற்காக நாம் அரசியல் பாதையில் சரியான வழியில், வழிகாட்டலில் பயணிக்க வேண்டும். 05;02;2022 சனிக்கிழை காலை முதல்வராக பதவிப்பிரமாணமும் செய்துகொண்டார்.
கடந்த ஆண்டு பிரான்சின் அனைத்து இடங்களிலும் இத்தேர்தல்கள் நடைபெற்றதும் அதில் பல இடங்களில் 16 க்கும் மேற்பட்ட தமிழர்கள், இளையவர்கள் மாநகரசபையின் முதல்வர்களின் ஆலோசகர்களாக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடைபெற்ற பொண்டி மாநகரத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட முதல்வருக்கும், ஏனையவர்களுக்கும் தமது உளப்பூர்வமான வாழ்த்துகளை தமிழர் கட்டமைப்புக்களும், தனிப்பட்டவர்களும் நேரடியாகவும், தொலைபேசி, மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவித்து வருகின்றனர். கோவிட் 19 சுகாதார நடைமுறைகள் காரணமாக முதல்வரோடான நேரடி சந்திப்பு தவிர்க்கப்பட்டு வருவதால் விரைவில் அவரைச் சந்தித்து ஒட்டுமொத்த தமிழீழ மக்கள் சார்பாக வாழ்த்துகள் தெரிவிக்கப்படவுள்ளது என்பதோடு அரசியல், மற்றும் அனைத்து விடயங்களிலும் தமிழ் குமுகாயத்தோடு இவர்கள் பலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு அவர்களுடன் இருக்கும் நம்மவர்களும் தொடர்ந்து பயணிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழீழ மக்கள் நாம் பயணிப்போம்.
– தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு
