சிறிலங்கா நாட்டின் 74 ஆவது சுதந்திர தினமான நேற்று திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளோடு ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது . தமிழர்களுக்கு இன்றைய நாள் ஒரு கறுப்பு நாள் எனவும் அரசாங்கம் இனிமேல் மரண சான்றிதழ் வழங்குவோம் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும், கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை அன்புவெளிபுரம் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் தலைவி ஜே.நாகேந்திரன் ஆஷா இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நாட்டில் எமக்கு எந்த ஒரு சுதந்திரமும் இல்லை. நாங்கள் இன்றுவரை நிம்மதியாக இந்த நாட்டில் வாழவில்லை. அரசாங்கத்தின் அழுத்தங்களின் காரணமாக இன்றுவரை அரச புலனாய்வு துறையினர்களின் பல கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு, பின் தொடரப்பட்டு அச்சுறுத்தல்களுக்கு உட்படுகின்றோம்.
நாட்டின் ஜனாதிபதி உட்பட அனைத்து அரசியல் தலைமைகளும், அரச அதிகாரிகளும் இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஒவ்வொரு தீர்க்கமான கருத்துக்களும் தெரிவிக்காத நிலையில் ஆண்டுதோறும் தரவுகள் மாத்திரம் பெற்ற வண்ணம் இருக்கின்றார்கள்.
அவ்வாறு பெறப்பட்ட தரவுகளுக்கு இதுவரை எந்த ஒரு தீர்வும் கிட்டாத நிலையில் நீதியமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டு, ஊடகங்களுக்கு காணாமல் ஆக்கப்பட்டோர்கான மரண சான்றிதழ்கள் வழங்குவதாக தெரிவித்த விடயத்தை இன்றைய சுதந்திர தினத்தில் வன்மையாக கண்டிக்கிறோம்.
தமது உறவுகளுக்கு நீதி விசாரணை இல்லாமல் எவ்வாறு மரண சான்றிதழ் வழங்க முடியும். எமக்கு மரண சான்றிதழ் தேவையில்லை. அவர்களுக்கான சரியான ஒரு நீதி மாத்திரமே வேண்டும்.
ஜனாதிபதி கூறிய அதே வார்த்தையை மனப்பாடம் செய்துகொண்டு நீதியமைச்சர் மரண சான்றிதழ்கள் வழங்கப்படும் என்ற விடயத்தை கூறுவதை விட்டுவிட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சரியான ஆய்வுகளை மேற்கொண்டு எமக்கு சரியான நீதியை பெற்றுத்தர வேண்டும்.
நீதியமைச்சரின் குடும்பத்தினரோ அல்லது உறவினர்களோ இவ்வாறு கடத்தப்பட்டு அவர்களுக்கு நீதி கிடைக்காத பட்சத்தில் மரண சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றால் அவர் ஏற்றுக்கொள்வாரா? என அவர் கேள்வி எழுப்பினார்
மேலும், 1948 ஆம் ஆண்டு வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இந்த நாட்டில் இன்று வாழும் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு சுதந்திரமும் இல்லை.
இவ்வாறு இருக்கையில் நாம் எவ்வாறு சுதந்திர தினத்தை கொண்டாடுவது? நாட்டு மக்கள் என்ற வகையில் இவ்வாறான அநீதிகள் இழைக்கப்படாமல் இருந்தால் நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றாக இந்த சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடியிருக்கலாம் என திருகோணமலை தமிழர் சமூகத்தின் இணைப்பாளர் ஆர்.நிக்லஸ் தெரிவித்தார்