சிறிலங்காவின் சுதந்திர நாள்: தமிழ்த் தேசத்தின் கரி நாள்!

0
88

வடக்கு கிழக்கை தமிழர் தாயகமாகக் கொண்டு – வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் இறைமையானது, 1505ல் போர்த்துக்கேயராலும், 1658ல் ஒல்லாந்தராலும், 1796ல் பிரித்தானியராலும் தமிழ் மக்களின் அனுமதியின்றியே பறித்தெடுக்கப்பட்டிருந்தது. 1948ல் தமிழ் மக்களின் அனுமதியின்றி, சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்துக்கு, காலணித்துவ ஆட்சியாளர்களால் தமிழ்த் தேசத்தின் இறைமை கையளிக்கப்பட்டிருந்தது.

அன்று முதல் இன்றுவரை சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கோரப்பிடிக்குள் சிக்குண்டுள்ள தமிழினம், தமது சுதந்திரமான இருப்பைப் பாதுகாப்பதற்காக, உரிமை வேண்டிப் போராடி வருகின்றது.

சிறிலங்காவின் சுதந்திரத்தை, தமிழர்கள் இதுவரை அனுபவிக்கவில்லை. காலணித்துவ ஆட்சியிலிருந்து சிறிலங்கா சுதந்திரமடைவதற்கு முன்னிருந்தே, தமிழ் மக்களை நசுக்குவதையே நோக்காகக் கொண்டு, சிங்கள பௌத்த பேரினவாதம் செயற்பட்டு வந்திருக்கிறது.

காலணித்துவத்தின் ஆட்சிக்கு எதிராக – விடுதலை தாகத்துடன் தமிழர்களும் போராடியிருந்தனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கூடி மூவர்ணக் கொடியை முற்றவெளியில் ஏற்றியிருந்தனர். சிறிலங்காவின் சுதந்திரத்துக்கான போராட்டங்களில் தமிழர்களும் போராடியிருந்தனர்.

ஆயினும், காலணித்துவத்திலிருந்து விடுபடமுன்பிருந்தே, தமிழருக்குரிய உரிமையை கிடைக்கவிடாது சிங்களவர்கள் தடுத்ததன் காரணமாகவே, சுதந்திரத்தின் போதான 1948 இல் உருவான முதலாவது சோல்பரி அரசியலமைப்பையும் தமிழர் தரப்பு நிராகரித்திருந்தது.

இதனடிப்படையில், சிறிலங்காவின் சுதந்திர நாள் என்பது, தமிழர் வரலாற்றில் அழிக்க முடியாத பல வடுக்களைத் தந்து நிற்கும் கரிநாளாகவே உள்ளது
இத்தகைய வரலாற்று அனுபவங்களைக் கண்டுவந்த நிலையிலும் – தமிழ் மக்களுக்கு எவ்வித பாதுகாப்பையும் வழங்க முடியாத – ஒற்றையாட்சிக்குள்ளேயே, தமிழ் அரசியலை முடக்கும் சதியும் நடைபெற்றுவருகின்றது. ஒற்றையாட்சிமுறைமை தமிழ் மக்களுக்கு எவ்வித பாதுகாப்பையும் வழங்கப்போவதில்லை என்பதன் அடிப்படையிலேயே 74 வருடங்களாக தமிழ்த் தேசத்து மக்களாக ஒற்றையாட்சிக்குட்பட்ட 3 அரசியலமைப்புக்களையும் நிராகரித்து வந்துள்ளோம்.

தமிழ்த் தேசிய இனத்துக்குச் சொந்தமான மரபுவழித் தாயகம், தொன்மையான மொழி, எம்மைத் தக்கவைக்கக்கூடிய பொருளாதாரம், தனித்துவமான கலாசாரம் என்பவற்றை பாதுகாப்பதற்கான அடிப்படைத் தீர்வாக – இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டிக் கட்டமைப்புடனான தீர்வையே வலியுத்தி வருகின்றோம்.

தமிழ்த் தேசிய இனம் என்னும் ஒற்றைக் காரணத்துக்காகவே, சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்களை இனப்படுகொலை செய்திருந்தது. இன்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்களை தொடர்ச்சியாக செய்துகொண்டே வருகின்றது. சிறிலங்காவுக்குக் கிடைத்துள்ள சுதந்திரம் என்பது தமிழ்த் தேச இனவழிப்புக்கு வழிவகுத்திருந்தது என்பதன் அடிப்படையிலேயே, கடந்த 74 வருடங்களாக சிறிலங்காவின் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழ்த் தேசம் கரிநாளாக அடையாளப்படுத்தி வருகின்றது. தமிழ்மக்கள் இனவழிப்பைச் சந்தித்த பின்னரும் கூட, மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் இருப்புக்களை அழிக்கும் வகையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

அந்த வகையில் நாளைய சிறிலங்காவின் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழ்த் தேசம் கரிநாளாகவே அனுஸ்டிக்க வேண்டும் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுக்கின்றது.

தமிழ்த் தேசத்தின் கரிநாளான நாளைய தினத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களுக்கும், கடற்தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்துப் போராட்டங்களிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு வழங்குவதுடன், அப்போராட்டங்களில் தமிழ் மக்கள் கலந்து கொண்;டு வலுச்சேர்க்க வேண்டும் என்பதையும் கேட்டுநிற்கின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (பா.உ)
தலைவர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

செ.கஜேந்திரன் (பா.உ)
பொதுச்செயலாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here