இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வடமராட்சி மீனவர் ஒருவர் நேற்றுத் தனக்குத் தானே தீயிட்டு உயிரை மாய்க்க முற்பட்டபோது, தெய்வாதீனமான முறையில் அவர் சக மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
எனினும் இதன்போது அவரது படகு, வலைகள் என்பன முற்றாகத் தீயில் எரிந்து நாசமாகின. இந்தச் சம்பவம் வடமராட்சி, பொலிகண்டி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கத்தின் முன்பாக நேற்றுக்காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
வடமராட்சி கடற்பரப்புக்குள் கடந்த வாரம் அத்துமீறிய இந்திய மீனவர்கள், வடமராட்சி மீனவர்களின் வலைகளை அறுத்து நாசப்படுத்தியிருந்தனர்.
இதன்போது குறித்த மீனவரின் வலைகளும் நாசமாக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, வடமராட்சி மீனவர்கள் நேற்று நான்காவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அந்தப் போராட்டத்தின் ஓர் அங்கமாகவும், இந்திய மீனவர்களால் தனக்கு ஏற்பட்ட வாழ்வாதாரப் பாதிப்பைத் தாங்க முடியாமலும் பொலிகண்டிப் பகுதியைச் சேர்ந்த குறித்த மீனவர் தனது படகு , வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றை எரியூட்டிவிட்டு, தானும் தீயிட்டு உயிர் மாய்க்க முயன்றார்.
இதனைக் கண்ணுற்ற சக மீனவர்கள் உடனடியாகப் பாய்ந்துசென்று அவரது உயிர்மாய்ப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். ஆயினும் மீனவரின் படகு, வலைகள் என்பன தீயில் கருகி நாசமாகின