பிரதமரானார் ரணில்!

0
112

tkn-08-22-rm-101-bpsஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மு. ப. 10.10 அளவில் நடந்த விசேட வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் சத்தியப் பிரமாணம் செய்தார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்பது இது நான்காவது தடவையாகும்.

பிரதமரின் சத்தியப் பிரமாண உத்தியோக பூர்வ நிகழ்வையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

நல்லாட்சிக்கான பயணத்தில் இணைந்து செயற்படுவதென்ற உறுதிப்பாட்டைக் குறிக்கும் மேற்படி புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க ஆகியோரும் கைச்சாத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க சத்தியப் பிரமாணம் செய்யும் இந்த தேசிய வைபவம் நேற்று தேசிய கீதத்துடன் ஆரம்பமானது. மதத் தலைவர்களின் ஆசியுடன் பிரித் ஓதலுக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

சத்தியப் பிரமாணத்தையடுத்து மதத் தலைவர்களின் ஆசியைப் பெற்றுக் கொண்ட பிரதமருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரேமதாச உள்ளிட்ட முக்கியஸ்தர்கள். முன்னாள் அமைச்சர்கள் கட்சித் தலைவர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்காவது தடவையாக பிரதமராக நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

ரணில் விக்கிரமசிங்க முதல் தடவையாக 1993 மே மாதத்தில் இலங்கையின் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இரண்டாவது தடவையாக 2001 லும் மூன்றாவது தடவையாக 2015 ஜனவரியிலும் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து நான்காவது தடவையும் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க, ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். இது தேர்தல் வரலாற்றில் வேட்பாள ரொருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய வாக்குகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுற்ற மறுதினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது இணைந்து செயற்பட்டு நல்லாட்சியைக் கட்டியெழுப்ப முன்வருமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.

அதற்கிணங்க நேற்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கப்பாட்டு டன் இணைந்து செயற்படுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

நாட்டிலுள்ள இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் நாட்டின் நலனுக்காக இணைந்து செயற்பட முன்வந்துள்ளமை சுபீட்சத்தை நோக்கிய பயணத்தில் புதிய அத்தியாயமாகும் என அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here